சிறிது காற்று.

Sunday, May 31, 2009


நேற்றிரவு எங்கள் பகுதி மின்தடையினால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானது. சாயிந்திரமே போய் விட்ட மின்சாரம் இரவு முழுவதும் வரவே இல்லை. மின் ஊழியர்கள் தெருவின் இரண்டு இடங்களில் பள்ளம் தோண்டி இருந்தார்கள். ஒயர் எரிந்ததுதான் காரணமெனவும் அதை சரிபடுத்துவது காலையில்தான் முடியும் என்றும் சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். வெயில் அடங்கி இரவு தொடங்கியதும் அதன் விளைவு அதிகமானது.

கனத்த போர்வையைப் போல் இருட்டு பகுதி முழுக்க போர்த்திக் கிடந்தது, சில வீடுகளில் தற்காலிக மின் விளக்கை ஒளிரவிட்டு இருளை விலக்கிக் கொண்டார்கள். மிச்ச வீடுகளில் மெழுகுவர்த்தி அனையாமல் எரிந்துக் கொண்டிருந்தது. ஆனால் வீட்டுக்குள் படுக்க விடாமல் நெருஞ்சி முள்ளைப் போல் உறுத்திக் கொண்டே இருந்த வெப்பத்தை யவராலும் விலக்கிக் கொள்ள முடியவில்லை. எல்லோரும் உஷ்… உஷ்... என்ற சப்தத்துடன் பேப்பரையோ முந்தானையையோ வீசிக்கொண்டு காற்றைத் தேடி மாடிகளுக்கு தஞ்சம் புகுவதை பார்க்க நேர்ந்தது. ஏதோ ஒரு விசும்பல் மேலெழுந்து தெருவெங்கும் விரவிக் கிடந்ததைப் போல இறுகிய மௌனம் எல்லா வீடுகளிலும் நிரைந்திருந்தது. மின்தடை என்பது அவ்வப்போது நிகழும் ஒன்றுதான் என்றாலும் நேற்று ஏற்பட்ட அனுபவம் முற்றிலும் புதிது.

மின்சாரம் இல்லை என்றதுமே ஒருவித வெறுப்புணர்வே மேலிட்டிருந்தது. இன்று எப்படி தூங்குவது என்ற என்னமே தூக்கத்தை களைத்து விட்டது. நான் பாயை விரித்த படுக்க ஆயத்தமான போது தூக்கத்திற்கான அறிகுறிகள் சிறிதும் என்னிடம் இல்லை. அடர்ந்திருந்த இருட்டை மெழுகுவர்த்தியின் சிறு வெளிச்சம் சற்று விலக்கியிருந்தது. சன்னல் அருகில்தான் படுத்தேன், எனக்கு முன்பே வெக்கை இடம் பிடித்திருந்தது. பொருமிக் கொண்டிருந்த வெக்கை மெல்ல மெல்ல உடலில் ஊறத் துவங்கி பின் அதன் பெருவாயில் என்னை போட்டு மென்று துப்பிக் கொண்டிருந்தது. வியர்வை பிசுபிசுக்க எரிச்சலுடன் புரண்டு கொண்டிருந்தேன். கண்களை இறுக மூடிக் கொண்டும் பிடித்த ஏதாவதொன்றை நினைத்துக் கொண்டும் மனதை அமைதி படுத்திப் பார்த்தும் தூக்கம் வரமறுத்து வெதும்ப துவங்கி விட்டது உடல். பகல் முடிந்து விட்டாலும் அது உமிழ்ந்துச் சென்ற வெப்பம் ஒரு வேட்டை நாயை போல அலைந்துக் கொண்டிருப்பதையும் அது தன் எச்சில் நாக்கோடு நம்மை நக்கிக் குடித்து விட தீராத வேட்கையோடு தரையில் படுத்திருப்பதையும் அப்போதுதான் உணர முடிந்தது.

எத்தனை முயற்சித்தும் தூக்கம் விலகிக் கொண்டே இருந்ததே தவிர இணக்கம் கொள்ளவில்லை. சிறிது காற்று வந்தால் போதும் என மனம் ஏக்கம் கொண்டு காற்றை யாசித்தது. சன்னல்கள் அனைத்தும் அகல விரிந்திருந்தும் சொட்டுக் காற்று உட்புகவில்லை. காற்றை முழுவதும் தன் இலைகளுக்குள் தேக்கி வைத்துக் கொண்டு ஏதோ ஒரு சொல்ல முடியாத துக்கத்தோடு உறங்கி விட்டதைப் போல மரங்கள் அசைவற்று நின்றிருந்தன. நான் பாயை சுருட்டிக் கொண்டு பால்கனி. வெளி வராண்டா, மாடிப்படி, மொட்டைமாடி என்று நள்ளிரவு கடந்து காற்றுக்காக ஏங்கி அலைந்துக் கொண்டிருந்தேன்.

மின் விசிறியின் சுழற்சியில் இத்தனைநாளும் மயக்கம் கொண்டே தூங்கிப் போயிருக்கின்றோம். அதன் சுழற்சி தடைப்பட்ட போது செயற்கைக் காற்றை உருவாக்கி வைத்து கொண்டுதான் நாம் சுவாசம் செய்துக் கொண்டு இருக்கின்றோமோ என்ற பயம் தொற்றிக் கொண்டு விடுகின்றது. காற்று வெறும் சுவாசத்திற்கு மட்டும்தானா அல்லது நம் உடம்பும் காற்றை சுவாசிக்கின்றதா என்ற எண்ணம் தோன்றுகின்றது. சீரான முறையில் சுவாசித்தாலே நோய் இன்றி வாழவும் உடல் மற்றும் மனதை திடமாக வைத்துக் கொள்ளலாம் என்று யோகா கற்றுத் தருகின்றது. அதி காலை வேளையில் காற்று வாங்குவதற்காகவே கடற்கரையை நாடி ஏன் இத்தனை கூட்டம் செல்கின்றது.

காற்றுக்காக நாம் எவ்வளவு ஏங்கி இருக்கிறோம் என்பதையும், காற்றுக்கு வேலிக்கட்ட முடியாது என்ற பழமொழியை செல்லாததாக்கிவிட்டு காற்றுக்காக காத்திருக்கவும் காற்றைத் தேடிச் செல்லவும் துவங்கி விட்டோம் என்பதை பாதி தூக்கம் பறிபோன நிலையில் நன்கு உணர முடிந்தது.

இறந்துக் கொண்டிருந்த மிருகத்திலிருந்து வெளிபடும் மூச்சை போல் விட்டுவிட்டு சிறிது சிறிதாய் வீசியக் காற்றில் பின்னிரவுக்கு மேல் கண்ணயர்ந்து தூங்கிப் போய்விட்டேன். காலையில் எழுந்த போது உடம்பு முழுதும் வெப்பமேறிப் போய் மோத்திரம் கடுத்துவிட்டிருந்தது.



------------------------------------////////---------------------------------------------


குறிப்பு; - தலைப்பு எஸ.ராவின் ‘சிறிது வெளிச்சத்தை’ நினைவுப் படுத்தும் நானும் அவ்வண்ணமே இத்தலைப்பை தேர்ந்தேன். முதலில் வேறு தலைப்புதான் இட்டிருந்தேன் இது இதற்கு பொருந்தும் என்பதால் இதுவே வைத்து விட்டேன். மேலும் நேற்று என்பது கடந்த வெள்ளி இரவு.




அன்புடன்…
ஆ.முத்துராமலிங்கம்

20 comments:

Anonymous May 31, 2009 at 8:03 AM  

அழகான எழுத்து நடை. தொடருங்கள்.

Anonymous May 31, 2009 at 8:05 AM  

ஆஹh மீத பர்ஸ்ட்

மாதவராஜ் May 31, 2009 at 8:08 AM  

காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தது போல் இருக்கிறது. புழுக்கத்தில் நெளிந்த அனுபவம் உங்கள் எழுத்தில் மிக அற்புதமான நடையில் வெளிப்பட்டு இருக்கிறது. காற்றை ஆழ உள்ளிழுப்பதைப் போல ஒரு மொழிவாசம் உங்களிடமிருக்கிறது. ரசித்துச் சொல்ல நிறைய இடங்கள் இருக்கின்றன.

சரி... சாத்தூரில் இரண்டு நாளாய் மழையும், தூறலுமாய் சிலுசிலுவென்று இருக்கிறது.

ஆ.ஞானசேகரன் May 31, 2009 at 8:12 AM  

//காற்றை முழுவதும் தன் இலைகளுக்குள் தேக்கி வைத்துக் கொண்டு ஏதோ ஒரு சொல்ல முடியாத துக்கத்தோடு உறங்கி விட்டதைப் போல மரங்கள் அசைவற்று நின்றிருந்தன.//

நல்ல நடை அழகாக இருக்கு நண்பா..

sakthi May 31, 2009 at 8:17 AM  

எழுத்துப்பிழைகளை திருத்துங்கள் முத்து

நிகளும் நிகழும்
விளகிக் விலகிக்
சீறான சீரான
இருக இறுக
என்னம் எண்ணம்

திருத்திவிட்டு இந்த பின்னூட்டத்தை அழித்துவிடுங்கள்

sakthi May 31, 2009 at 8:17 AM  

அழகான படைப்பு

வாழ்த்துக்கள்

வினோத் கெளதம் May 31, 2009 at 8:44 AM  

நண்பா அருமையா எழுதி இருக்கீங்க கவிதை வடிவில்..
ஆனா நம்ம இதே மாதிரி செயற்கையான காற்றுக்கு நம்மை முழவதுமாக இழந்து விடாமல்..இயற்கையான அது வெக்கையாக இருந்தாலும் தயார்ப்படுத்தி கொள்வது நல்லது..

அப்துல்மாலிக் May 31, 2009 at 9:13 AM  

எழுத்துநடை வியப்பிலாழ்த்தியது

நேராக இருந்து அனுபவித்த மாதிரி ஒரு ஃபீலிங்

நன்றாக இருந்தது தல

வாழ்த்துக்கள்

Anonymous May 31, 2009 at 1:12 PM  

உங்களின் கவிதைகளினைப் போலவே ஒரு... ஒரு புதிய வாசிப்பு அனுபவம்!
வெம்மை கலந்த கதகதப்பான எழுத்துக்கள்!

ஆ.சுதா May 31, 2009 at 7:42 PM  

@ கடையம் ஆனந்த் said...
அழகான எழுத்து நடை. தொடருங்கள்.

நன்றிங்க தொடர்கின்றேன்.

@ ஆஹh மீத பர்ஸ்ட்

ஆஹா!!எனக்குமா.

ஆ.சுதா May 31, 2009 at 7:46 PM  

ரொம்ப சந்தோசமா இருக்கு மாதவராஜ் சார் உங்கள் பாராட்டு. ஆர்வத்தையும் தூண்டுகின்றது. நன்றி.

|சரி... சாத்தூரில் இரண்டு நாளாய் மழையும், தூறலுமாய் சிலுசிலுவென்று இருக்கிறது.|

கொடுத்து வைத்தவர்கள்...
சென்னையிலும் இடையே சின்ன மழையும் அதன் பின் மேகமூட்டமும்
வெயிலை குறைத்தாலும் வெக்கை போகவில்லை.

(எங்க ஊரிலும் மழை பெததாக வீட்டல சொன்னாங்க)

ஆ.சுதா May 31, 2009 at 7:49 PM  

வாங்க ஆ.ஞானசேகரன் உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே.

________________________

வணக்கம் சக்தி எழுத்துப்f பிழையை சரி செய்து விட்டேன். எழுத்துப் பிழையை சொல்லிந்தந்ததிற்கு ரொம்பவும் நன்றிங்க.

ஆ.சுதா May 31, 2009 at 7:52 PM  

@ sakthi said...
அழகான படைப்பு

வாழ்த்துக்கள்

நன்றி சக்தி

------------------------------

vinoth gowtham said...
நண்பா அருமையா எழுதி இருக்கீங்க கவிதை வடிவில்..
ஆனா நம்ம இதே மாதிரி செயற்கையான காற்றுக்கு நம்மை முழவதுமாக இழந்து விடாமல்..இயற்கையான அது வெக்கையாக இருந்தாலும் தயார்ப்படுத்தி கொள்வது நல்லது..

முதலில் நன்றி.
உங்கள் அறிவுருத்தல்தான் இக்கட்டுரையின் நாதமும்.
நன்றி நன்பரே!!

_-------------------------

கவின் said...
உங்களின் கவிதைகளினைப் போலவே ஒரு... ஒரு புதிய வாசிப்பு அனுபவம்!
வெம்மை கலந்த கதகதப்பான எழுத்துக்கள்!

நன்றி கவின்.

ஆதவா May 31, 2009 at 9:24 PM  

ரொம்ப பிரமாதமான எழுத்து நடை ஆ.முத்துராமலிங்கம். எழுத்தோடே சென்று காற்றீன்றி களிப்பதுபோல இருந்தது. மாதவராஜ் குறிப்பிட்டமாதிரி சில இடங்களில் சிலாகித்தேன். இவ்வகை அனுபவங்கள் புதிய பாணியை ஏற்படுத்தும்.

எழுத ஒன்றுமில்லை என்பவர்களுக்கு இக்கட்டுரையை முன்னுதாரணமாகக் கொடுக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு நொடியையும் நாம் எழுத்தால் வசப்படுத்தலாம்.

தினமும் நான் மாடியில்தான் படுப்பேன். காற்றுக்காகவும், வானத்திற்காகவும்..... வீட்டில் உப்புசம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். படுக்கவே முடியாது.

தொடர்ந்து எழுதுங்கள்

ஆ.சுதா May 31, 2009 at 10:19 PM  

வாங்க ஆதவா.
நம்முடைய அனுபவத்திலிருந்து எழுத நிரைய விசயங்கள் இருக்கின்றது. இது என்னுடயை முதல் அனுபவக்கட்டுரை. உங்களை போன்ற பாரட்டுக்களை பெருவதில் இன்னும் எழுத ஆர்வத்தை தூண்டுகின்றது.
மகிவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மிகவும் நன்றி ஆதவா.
(அடுத்தப் பதிவு நம்ம நண்பர் அன்புமணி அவர்களை சந்தித்ததைப் பற்றி வரும்)

S.A. நவாஸுதீன் May 31, 2009 at 11:32 PM  

அற்புதமான எழுத்து நடை, சொல்லாடல், உங்களை நானாக உணரத்தொடங்கினேன்.

ஆதவன் சரியாகச் சொன்னார் "எழுத ஒன்றுமில்லை என்பவர்களுக்கு இக்கட்டுரையை முன்னுதாரணமாகக் கொடுக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு நொடியையும் நாம் எழுத்தால் வசப்படுத்தலாம்" என்று.

"சுழற்சி தடைப்பட்ட போது செயற்கைக் காற்றை உருவாக்கி வைத்து கொண்டுதான் நாம் சுவாசம் செய்துக் கொண்டு இருக்கின்றோமோ என்ற பயம் தொற்றிக் கொண்டு விடுகின்றது".

ரொம்பவும் யோசிக்க வைத்த வரிகள் அற்புதம்.

"காற்றுக்காக நாம் எவ்வளவு ஏங்கி இருக்கிறோம் என்பதையும், காற்றுக்கு வேலிக்கட்ட முடியாது என்ற பழமொழியை செல்லாததாக்கிவிட்டு காற்றுக்காக காத்திருக்கவும் காற்றைத் தேடிச் செல்லவும் துவங்கி விட்டோம் என்பதை பாதி தூக்கம் பறிபோன நிலையில் நன்கு உணர முடிந்தது."

தெரிந்த ஒன்றை வேறு கோணத்தில் சிந்தித்து தெளிய வைத்திருக்கின்றீர்கள்.

புதியவன் June 1, 2009 at 12:09 AM  

எழுத்து நடையில் பெரும் வித்தியாசம் உணர முடிகிறது முத்துராமலிங்கம்...

அருமையான படைப்பு...தொடருங்கள் வாழ்த்துக்கள்...

கார்த்திகைப் பாண்டியன் June 1, 2009 at 2:22 AM  

முதல் முறையாக உங்கள் உரைநடை எழுத்தில் இது ஒரு முக்கியமான பதிவு நண்பா.. சின்ன விஷயத்தை அழகாக, ஆழ்ந்து சொல்லி உள்ளீர்கள்.. அருமை.. வாழ்த்துக்கள்

ஆ.சுதா June 1, 2009 at 2:55 AM  

நன்றி S.A. நவாஸுதீன்,
நல்ல இடங்களை சுட்டிக்காட்டி ஊக்கமிளித்தற்கு மிகவும் நன்றிங்க.

-------------------------------

நன்றி புதியவன்.
(புது தளத்த கண்டுபிடிச்சிட்டீங்களா!!)
ரொம்ப நன்றி நண்பா.

----------------------------------

ஆமாம் கார்த்திகைப் பாண்டியன் இது எனக்கு முக்கியமானதுதான். இத்தனை பேரிடம் சிறப்பான பாராட்டைப் பெற்றிருக்கின்றது. ரொம்ப சந்தோசமும் கூட பாண்டியன்.

நன்றி கார்த்திகைப் பாண்டியன்.

அன்புடன் அருணா June 1, 2009 at 6:23 PM  

காற்றில்லாமல் அழகாகத் தவிச்சிருக்கீங்க பென்சில்!

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP