கொடிய பகலின் விசும்பல்கள்

Monday, June 15, 2009


வெளியெங்கும் பெருகி வழியும்
வெயிலை பட்டாம்பூச்சியின் சிறு
வாயால் குடித்துப் பார்க்கின்றேன்
தேனின் சுவையொத்திருக்க மயங்கித்
தள்ளாடுகின்றதென்னுடல்.
நடன அசைவுகளோடு துள்ளித்
தெரிக்கும் என் நிழல் இரவின்
ஆட்டங்களை கூச்சமின்றி
பகலில் நிகழ்த்துகின்றது.
அரூபமாய் விலகிக் கொண்டே
இருக்கும் என்னிலான என்னை
துரத்திப் பிடிக்க விழைகையில்
ஆதி மானெனத் துள்ளியோடி
இரவுக்குள் ஒளிகின்றது.
விசும்பலென மேலெழும் ஏக்கக்
குரல்களை மண் விலக்கி புதைத்து
விட்டு வெளிப்படுகையில் காத்திருந்த
வெயில் என்னை ஒரே மடக்கில் குடித்து
விட்டு வெறித்தலைகின்றது. மிச்சப்படும்
என் மூச்சு தும்பியென மேலெழுந்து ஓயாத
ரீங்காரத்தோடு கிளையற்ற மரமொன்றில்
துளையிட்டு அடைந்து கொள்கின்றது.
வேலிப்பூக்களின் நுகர்படாத மனமும்
சுடு மணலில் நீண்டு கிடக்கும்
குழந்தையின் கால் தடமும் அக் கொடிய
பகலை நீட்டிச் செல்கின்றது இரவுவரை.

16 comments:

நந்தாகுமாரன் June 15, 2009 at 9:06 PM  

சந்திப் பிழைகளுக்கும் உங்களுக்கும் பத்து பொருத்தமும் ஒத்துப் போவது தெரிந்த விஷயம் தான், அதற்காகத் தலைப்பில் இருந்தேவா ...

//

வெளியெங்கும் பெருகி வழியும்
வெயிலை பட்டாம்பூச்சியின் சிறு
வாயால் குடித்துப் பார்க்கின்றேன்

//

என்ன ஒரு அபாரமான தொடக்கம்

கவிதையின் மொழி சிலிர்க்க வைக்கிறது நண்பரே ...

ஷண்முகப்ரியன் June 15, 2009 at 11:52 PM  

எல்லா நல்ல கவிதைகளையும் போல உங்கள் கவித்துவம் புரிகிறது.கவிதை புரியவில்லை,ஆ.மு.

மயாதி June 16, 2009 at 12:19 AM  

எப்படி நண்பரே இப்படி வார்த்தைப் பிரயோகங்களைக் கோர்க்க முடிகிறது உங்களால்..

கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கு,,நம்மாள முடியலையே என்று.

மாதவராஜ் June 16, 2009 at 12:49 AM  

வார்த்தைகளோடு விளையாடி இருக்கிறீர்கள். ஆனால் எழுத்துத்தான் உங்களோடு விளையாடுகிறது.

புதியவன் June 16, 2009 at 2:26 AM  

கவிதை முழுதும் பின் நவீனம் விளையாடி இருக்கிறது...

//அரூபமாய் விலகிக் கொண்டே
இருக்கும் என்னிலான என்னை
துரத்திப் பிடிக்க விழைகையில்
ஆதி மானெனத் துள்ளியோடி
இரவுக்குள் ஒளிகின்றது.//

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் முத்து ராமலிங்கம்...

நசரேயன் June 16, 2009 at 7:49 AM  

ரெண்டு மூணு தடவை படிச்சாத்தான் எதோ புரியுற மாதிரி இருக்கு

ஆ.சுதா June 16, 2009 at 10:20 AM  

அனைவருக்கும் என் நன்றிகள்.

சந்திப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் எனக்கு இயல்பாக வந்து விடுவதை ஆரம்பத்திலிருந்து கவனித்தே வருகின்றேன்.
அதற்கான காரணம் எனக்கு என்னவென்று நன்கு தெரியும்.
இன்னும் முயற்சிக்கின்றேன்.

Muruganandan M.K. June 16, 2009 at 10:31 AM  

நல்ல கவிதை.
"ஆதி மானெனத் துள்ளியோடி
இரவுக்குள் ஒளிகின்றது..." இது மிகவும் ரசித்த வரி.

Muruganandan M.K. June 16, 2009 at 10:31 AM  

நல்ல கவிதை.
"ஆதி மானெனத் துள்ளியோடி
இரவுக்குள் ஒளிகின்றது..." இது மிகவும் ரசித்த வரி.

Muruganandan M.K. June 16, 2009 at 10:31 AM  

நல்ல கவிதை.
"ஆதி மானெனத் துள்ளியோடி
இரவுக்குள் ஒளிகின்றது..." இது மிகவும் ரசித்த வரி.

ஆ.ஞானசேகரன் June 16, 2009 at 10:49 AM  

நல்ல வரிகள் கவிதையின் உற்கரு அவ்வளவாக எனக்கு விளங்கவில்லை நண்பா

பிரவின்ஸ்கா June 16, 2009 at 10:58 AM  

//விசும்பலென மேலெழும் ஏக்கக்
குரல்களை மண் விலக்கி புதைத்து
விட்டு வெளிப்படுகையில் காத்திருந்த
வெயில் என்னை ஒரே மடக்கில் குடித்து
விட்டு வெறித்தலைகின்றது//

நன்றாக இருக்கிறது கவிதை .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Anonymous June 16, 2009 at 10:10 PM  

இதை புரிந்துக் கொள்ளும் தமிழ் அறிவு எனக்கில்லைங்க... ஓப்புக் கொள்கிறேன் 3,4 முறை படித்தேன் கொஞ்சம் புரியுது புரியாத மாதிரி போகுது ப்ளீஸ் பொருள் கூறுங்கள்...

MSK / Saravana June 18, 2009 at 10:08 AM  

பின்றீங்க.. கலக்கல்..

sakthi June 20, 2009 at 10:29 AM  

என் மூச்சு தும்பியென மேலெழுந்து ஓயாத
ரீங்காரத்தோடு கிளையற்ற மரமொன்றில்
துளையிட்டு அடைந்து கொள்கின்றது.
வேலிப்பூக்களின் நுகர்படாத மனமும்
சுடு மணலில் நீண்டு கிடக்கும்
குழந்தையின் கால் தடமும் அக் கொடிய
பகலை நீட்டிச் செல்கின்றது இரவுவரை.

சற்றே புரிந்தும் புரியாத பின் நவீனக்கவிதை ....

ரசித்தேன்....

ஆ.சுதா June 21, 2009 at 8:21 AM  

அனைவருக்கும் என் நன்றிகள்.

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP