சகுனம் பார்க்கத் தெரியாதவன்

Friday, June 5, 2009


வர வர இடறிக்கொண்டே
இருந்தது. சகுனம் பார்க்கத்
தெரியவில்லை எனக்கு.
வரும் போது யாருடைய
முகத்தைப் பார்த்து வந்தேன்.
நினைவில்லை.
பூனையோ பல்லியோ அவைகளின்
செயல்களில் கூர்ந்திருக்க எனக்கு
தோன்ற வில்லை.
மேகம் கூட விலகி சுள்ளென்று.
வெயில் அடித்தது,
இல்லை எனில் அந்தச் சிறுவன்
சைக்கிளில் என் மீது மோதியிருக்க
மாட்டான்.
போய் சேர்ந்த பின்புதான்
பார்த்தேன் என்னை போலவே இன்னும்
சில பேர் வந்திருந்தனர்.
ஒரு வேளை நான் போனது கூட
அவர்களுக்கு சகுனம் பார்க்க
உதவியிருக்கலாம். யார் முகத்திலும்
நம்பிக்கை இல்லை.

Read more...

வார்த்தைக் கவிதை இரண்டு

Wednesday, June 3, 2009


வார்த்தைகள் நிரைந்த வெளி

வார்த்தைகளின் முடிச்சவிழ்க்கும் சூட்சுமம்
அறியாது அதன் வடிவங்களை பிரித்தெடுப்பதாய்
நாவால் பற்றி இழுக்கின்றேன்.
மையப்பகுதி விடுபட்டு கீழ்விழும் நான்
சிதறிக் கிடக்கும் சொற்களை அடுக்கி
மீண்டும் வார்த்தைச் செய்ய முயல்கின்றேன்.
தப்பியோடும் வார்த்தைகளை பின்
தொடர வெளியெங்கும் நிறைந்துக்
கிடக்கின்றன ஏதேதோ வார்த்தைகள்.
பறவையின் நிழலென ஊர்ந்துக் கொண்டே
இருக்கும் வார்த்தையை பிடிக்குள் இருத்த
சர்ப்பத்தின் நடனத்தோடு காத்திருக்கின்றேன்.
சுற்றிலும் வளர்ந்துக் கொண்டே இருக்கும்
வார்த்தைகளற்ற மௌனம் மெல்ல தன்
பிடிக்குள் இழுத்துச் செல்கையில்
கதவிடையில் புகும் வெளிக் காற்று
சப்தத்தை ஊற்றி நிரப்பிச் செல்கின்றது.
அலறி வெளியேறும் மௌனம் எனக்கான
வார்த்தையை ஈன்று தந்து விட்டு
மொழிகளற்ற ஆதிக்குள் பயணித்துக்
கொண்டிருக்கின்றது.

___*___



வார்த்தையற்றவன்

சரளமான பேச்செனக்கு
வாய்த்திரவில்லை
உங்களின் வார்த்தைகளை
வைத்தை என் வார்த்தைகளை
தேர்ந்துக் கொள்கின்றேன்.
முனை மங்கிய பற்களுக்கிடையில்
சிக்கி வெளிவரும் என் வார்த்தைகள்
உயிரற்றது என்பதை உங்களால்
உணர்ந்து கொள்ள முடியாது.
அர்த்தமற்ற சொற்களைக் குவித்து
என்னிடம் எதை தேடுகிறீர்கள்
என்னை எப்போதும் மீட்டுச் செல்லும்
சிறு புன்னகையை தவிற வேறென்ன
இருக்கப் போகிறது என்னிடம்.
பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கும்
என் மௌனத்தையும் கலைந்து விட்டு
போய் விடுங்கள் இல்லையெனில்
உங்கள் நிழலைப் போல்
உங்கள் பின்னாலேயே வரக்கூடும்.

Read more...

நூல் வெளியீட்டு விழாவில் என் முதல் அனுபவமும், நண்பர் அன்புமணியுடனான இனிப்பான சந்திப்பும்.

Monday, June 1, 2009


நான் இதுவரை நூல் வெளியீட்டு விழாவிலோ அல்லது இலக்கியக் கூட்டத்திலோ கலந்துக் கொண்டதுக் கிடையாது அதற்கான வாய்ப்பும் அமைந்ததில்லை (அதுல எல்லாம் கலந்துக்கிரதுக்கு உங்கிட்ட என்ன தகுதி இருக்குன்னு மண்டையில ஒரு கொட்டு விழுவது புரியுது). சில தினங்களுக்கு முன் நண்பர் குடந்தை அன்புமணி அவர்கள் கவிஞர் அருனாசலசிவா அவர்களின் ‘பொன்விசிறி’ என்ற நூலின் வெளியீட்டு விழா பற்றி ஒரு பதிவாக இட்டு இருந்தார். என்னையும் அதில் கலந்துக் கொள்ள வருமாறுக் கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பேரிலே நானும் சென்றேன். சென்றதற்கு முழுக் காரணம் நம் சக பதிவு நண்பர் ஒருவரை சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணமே என்றாலும் என்னை முதன் முதலாக இது போன்ற இலக்கிய கூட்டதில் கலந்து கொள்ள வைத்த நண்பர் அன்புமணிக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

நானும் நண்பனும் வடபழனியில் இருந்துக் கிளம்பி மைலாப்பூர் ரானடே நூலகத்திற்கு வந்தபோது நுழைவாயிலில் ஒருவர் வரவேற்றுக் கொண்டிருந்தார். எங்களையும் வரவேற்றார், அவர் யாரென்பது உள்ளே சென்றதும் தான் தெரிந்தது. அவர்தான் ‘பொன்விசிறி’ நூலின் ஆசிரியர் திரு.அருனாசலசிவா அவர்கள். நிகழ்ச்சி தொடங்கி சிறிது நேரம் கழித்துதான் அன்புமணி வந்தார் வந்ததுமே கண்டுபிடித்து விட்டேன். அவருடைய நண்பர் கவிஞர் பாரதிமோகனுடன் வந்திருந்தார். பாரதிமோகன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தபடியே இருக்கைக்குக் கூட்டிச் சென்றார். பின் மாலைமுரசு உதவி ஆசிரியர் திரு.அனழேந்தி அவர்களையும் அறிமுப்படுத்தி வைத்தார்.

அறிமுகமாகி பேசத் துவங்கியதும் எந்த ஒரு தயக்கத் தொனிவுமின்றி
ஏற்கனவே நெருங்கிப் பழகினவரைப் போல இயல்பாக பேசினார் அன்புமணி. எனக்கு அதற்கு முன் சிறிய தயக்கமிருந்தது அது அவருடைய பேச்சில் கரைந்து விட்டது. எங்கள் பேச்சு வலை நண்பர்களையும் வலையைப் பற்றியும் துவங்கி பின் நிகழ்சிக்குச் சென்றது. மேடையில் பேராசிரியர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்.
அவருடைய பேச்சு நிரைய விசயங்களை அடக்கியிருந்தது. அதில் ஒன்று ரஷ்யாவில் உள்ள ஒரு நூலகத்தில் பைபில் குரான் கீதை உட்பட எல்லாப் புத்தக அலமாரிகளையும் திறந்தே வைத்திருந்தும் ஒன்றை மட்டும் மூடி பாதுகாப்பாக வைத்துள்ளார்கலாம் அது என்ன நூல் என்றால் நம்முடைய திருக்குறள் என்றும் அதற்கான காரணத்தையும் சொல்லி மிக அருமையாகப் பேசி முடித்தார். அடுத்து பேச வந்த ஓவியக் கவிஞர் திரு.அமுதபாரதி அவர்கள் வந்ததும் ஐம்பத்தி ஐந்து வணக்கங்கள் என்று ஆரம்பித்தார். அப்படி சொன்னதும் எல்லோர் புருவமும் உயர்ந்து விட்டது. அதற்கு அவரே விளக்கம் அளித்தார், இக்கூட்டதிற்கு வந்திருக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வணக்கங்கள் என்று கூறி சிதரி இருந்த கூட்டக் கவனத்தை மேடைக்கு ஈர்த்து விட்டார். தொடர்ந்த அவர் இலக்கியப் பேச்சு மிகுந்த ரசனையுடன் நாவண்மையுடன் எல்லோரையும் வசீகரித்தது. அவர் பேசும் போது மட்டும் அன்புமணியும் நானும் பேசிக் கொள்ளவில்லை. அடுத்ததாக திரு.கிரிஜா மணாளன் அவர்கள் சிரிது பேசினார். அவர் பேச தயக்கம் தெரிவித்தும் அன்புடன் வற்புறுத்தி பேச வைத்தவர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி. இவர்தான் ஒவ்வொருவரையும் பேச அழைத்தார். அடுத்ததாக கவிஞர் அ.கௌதமன் அவர்கள் பேசினார் அவர் சற்று திக்கி திக்கியே பேசினார். இடையில் நான் அழைத்து வந்த நண்பர் தூக்க மிகுதியில் வேலை இருப்பதாக சொல்லிச் சென்று விட்டார். அடுத்ததாக பேச வந்த கவிஞர் நாணற்காடன் என்னையும் அன்புமணியையும் பேச வழி செய்தார். அலுவலகம், பணி, சூழல் பற்றி மீண்டும் சிரிது பேசிக் கொண்டோம். கவிஞர் நானற்காடன் புதியவர். அதன் தயக்கம் அவர் பேச்சில் விரிவாக தெரிந்தது. அவர் சுருக்கமாக பேச யோசித்து வைத்திருக்கலாம். அவர் பேசி முடிக்கையில் கூட்டம் இல்லை மிச்சம்தான் இருந்தது. ஒரு இருபது பேர் இருந்திருப்போம் மேடையில் உள்ளவர்களையும் சேர்த்து.

நிகழ்சி முடிந்ததும் மயிலாடுதுறை இளையபாரதி (ஓவியா சிற்றிதழின் ஆசிரியர்), கிரிஜாமணாளன், நாணற்காடன், இன்னும் சிலர் என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார் அன்புமணி. பின் ஆளுக்கொரு பொன்விசிறியை வாங்கிக் கொண்டோம். நாணற்காடனும் அவருடையப் புத்தகம் ஒன்றினை கொடுத்தார், ஓவியா சிற்றிதழ், பொதிகை மின்னல், கொடி என்றொரு கையேடு அளவே உள்ள சிறிய பதிப்பு, :: இடைவெட்டு கொடி ஆசிரியரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும் அவர் சிவகாசியிலிருந்து வந்திருந்தவர். புத்தக வடிவம் என்று ஏதும் இல்லை அவருடை சிற்றிதல் ஒரு A4 அளவு தாளில் கணனி அச்சும் கையெழுத்துப் பிரதியுமாக தயாரித்துள்ளார்கள். பார்க்க மிகவும் எளிமையாக இருந்தார். மிகுந்த ஆர்வமும் தமிழ் பற்றுமே இதில் ஈடுபட வைத்திருக்கும் என எண்ணுகிறேன் :: இது போன்ற பலரின் உழைப்பும் நல்லெழுத்துக்களும் தாங்கிய போதித்தாள்கள் கையில் நிறைந்து விட்டிருந்தது.

வெளியே வந்ததும் நான், அன்புமனி, அவர் நண்பர் பாரதிமோகன :: இடை வெட்டு நண்பர் பாரதிமோகன் ஏற்கனவே கவிதை நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அடுத்தும் அவர் மௌனத்தின் சிறகு என்ற கவிதை நூலினை வெளியிட உள்ளார் :: மற்றும் மாலைமுரசு உதவி ஆசிரியர் அணழேந்தி அவர்களோடு சேர்ந்து நாண்கு பேரும் பேரூந்து நிருத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். எங்களுக்கு முன் நூலை வெளியிட்ட ‘பொதிகைத் மின்னல்’ன் ஆசிரியர் வசீகரன் அவர்கள் சபையோருக்கு தேனீர் வளங்கிய பாத்திரத்தை சும்ந்தபடி சென்றுக் கொண்டிருந்தார். வழியில் அனழேந்தி ஐயாவுக்கும் பாரதிமோகனுக்கும் இடையில் ஒரு கவிதை போட்டியே நடந்து விட்டது. அவர்களுடைய அய்க்கூக்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. மிகச் சிறந்ததாக இருந்தது அவர்களுடைய அய்க்கூ மற்றும் பேச்சு. அதிலொன்று பாரதிமோகனுடையது
எரிந்தது மூங்கில் காடு
திசையெங்கும் இசையின்
சாம்பல்.

இதற்கு சவாலாகவே அனழேந்தி அவர்களுடைய கவிதையும் அனல் பறந்தது. நாங்கள் பேரூந்து நிருத்ததிற்குச் சென்ற போது ஏதாவது சாபிடலாமே என்று அருகில் இருந்த உணவு விடுதியில் பழச்சாறு அருந்தி விட்டு வெளியே வரவும் பேரூந்து சரியாக வந்து. எனக்கு வடபழனியும் மற்ற மூவருக்கும் தீ நகருக்கும் பயணச்சீட்டுப் பெற்றுக் கொண்டு அமர்ந்தோம்.

பேரூந்தில்தான் அன்புமணியுடன் கொஞ்சம் அதிகம் பேச முடிந்தது. அவர் எதையும் வெளிப்படையாகவே பேசினார். தாம்பரத்தில் அவர் ‘பொதிகைத் தென்றல்’ என்ற சிற்றிதழை நடத்தியதையும் அது சூழ்நிலைக் காரணமாக நின்று விட்டதாகவும் பகிர்ந்துக் கொண்டார். அவரின் பேச்சின் மூலமாக சிற்றிதழை ஆரம்பித்து அதை மக்களிடம் கொண்டுச் செல்லவும் அதை தொடர்ந்து நடத்தவும் உழைப்பு, முயற்சியைத் தாண்டி ஒரு அர்ப்பணிப்பு வேண்டும் என தெறிந்துக் கொள்ள முடிந்தது. மேலும் அவர் அவருடைய பகுதியில் உள்ள கவிதையார்வாளர்களை ஒன்றினைத்து யாராவது ஒருவர் வீட்டில் அமர்ந்து கவிதை விவாதம் செய்வதாகச் சொன்னார். தீ நகர் வந்ததும் மீண்டும் இது போன்ற நிகழ்சி அல்லாது வெரொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாமென்று சொல்லி அன்புமணி விடபெற்றுக் கொண்டார். அவர்களை இறக்கி விட்டுவிட்டு என்னை மட்டும் பிரித்துச் சென்று கொண்டிருந்தது பேரூந்து. அன்புமணியுடனான இனிமையான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக அமைந்தது. தூங்கி வழியும் ஞாயிற்றுக் கிழமையை நட்பு வழிவதாய் மாற்றி இருந்தது அந்த சந்தர்ப்பம். நான் பனி சொட்டிய நிணைவுகளுடன் திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தேன் என் பணிமணைக்கு.

Read more...

சிறிது காற்று.

Sunday, May 31, 2009


நேற்றிரவு எங்கள் பகுதி மின்தடையினால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானது. சாயிந்திரமே போய் விட்ட மின்சாரம் இரவு முழுவதும் வரவே இல்லை. மின் ஊழியர்கள் தெருவின் இரண்டு இடங்களில் பள்ளம் தோண்டி இருந்தார்கள். ஒயர் எரிந்ததுதான் காரணமெனவும் அதை சரிபடுத்துவது காலையில்தான் முடியும் என்றும் சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். வெயில் அடங்கி இரவு தொடங்கியதும் அதன் விளைவு அதிகமானது.

கனத்த போர்வையைப் போல் இருட்டு பகுதி முழுக்க போர்த்திக் கிடந்தது, சில வீடுகளில் தற்காலிக மின் விளக்கை ஒளிரவிட்டு இருளை விலக்கிக் கொண்டார்கள். மிச்ச வீடுகளில் மெழுகுவர்த்தி அனையாமல் எரிந்துக் கொண்டிருந்தது. ஆனால் வீட்டுக்குள் படுக்க விடாமல் நெருஞ்சி முள்ளைப் போல் உறுத்திக் கொண்டே இருந்த வெப்பத்தை யவராலும் விலக்கிக் கொள்ள முடியவில்லை. எல்லோரும் உஷ்… உஷ்... என்ற சப்தத்துடன் பேப்பரையோ முந்தானையையோ வீசிக்கொண்டு காற்றைத் தேடி மாடிகளுக்கு தஞ்சம் புகுவதை பார்க்க நேர்ந்தது. ஏதோ ஒரு விசும்பல் மேலெழுந்து தெருவெங்கும் விரவிக் கிடந்ததைப் போல இறுகிய மௌனம் எல்லா வீடுகளிலும் நிரைந்திருந்தது. மின்தடை என்பது அவ்வப்போது நிகழும் ஒன்றுதான் என்றாலும் நேற்று ஏற்பட்ட அனுபவம் முற்றிலும் புதிது.

மின்சாரம் இல்லை என்றதுமே ஒருவித வெறுப்புணர்வே மேலிட்டிருந்தது. இன்று எப்படி தூங்குவது என்ற என்னமே தூக்கத்தை களைத்து விட்டது. நான் பாயை விரித்த படுக்க ஆயத்தமான போது தூக்கத்திற்கான அறிகுறிகள் சிறிதும் என்னிடம் இல்லை. அடர்ந்திருந்த இருட்டை மெழுகுவர்த்தியின் சிறு வெளிச்சம் சற்று விலக்கியிருந்தது. சன்னல் அருகில்தான் படுத்தேன், எனக்கு முன்பே வெக்கை இடம் பிடித்திருந்தது. பொருமிக் கொண்டிருந்த வெக்கை மெல்ல மெல்ல உடலில் ஊறத் துவங்கி பின் அதன் பெருவாயில் என்னை போட்டு மென்று துப்பிக் கொண்டிருந்தது. வியர்வை பிசுபிசுக்க எரிச்சலுடன் புரண்டு கொண்டிருந்தேன். கண்களை இறுக மூடிக் கொண்டும் பிடித்த ஏதாவதொன்றை நினைத்துக் கொண்டும் மனதை அமைதி படுத்திப் பார்த்தும் தூக்கம் வரமறுத்து வெதும்ப துவங்கி விட்டது உடல். பகல் முடிந்து விட்டாலும் அது உமிழ்ந்துச் சென்ற வெப்பம் ஒரு வேட்டை நாயை போல அலைந்துக் கொண்டிருப்பதையும் அது தன் எச்சில் நாக்கோடு நம்மை நக்கிக் குடித்து விட தீராத வேட்கையோடு தரையில் படுத்திருப்பதையும் அப்போதுதான் உணர முடிந்தது.

எத்தனை முயற்சித்தும் தூக்கம் விலகிக் கொண்டே இருந்ததே தவிர இணக்கம் கொள்ளவில்லை. சிறிது காற்று வந்தால் போதும் என மனம் ஏக்கம் கொண்டு காற்றை யாசித்தது. சன்னல்கள் அனைத்தும் அகல விரிந்திருந்தும் சொட்டுக் காற்று உட்புகவில்லை. காற்றை முழுவதும் தன் இலைகளுக்குள் தேக்கி வைத்துக் கொண்டு ஏதோ ஒரு சொல்ல முடியாத துக்கத்தோடு உறங்கி விட்டதைப் போல மரங்கள் அசைவற்று நின்றிருந்தன. நான் பாயை சுருட்டிக் கொண்டு பால்கனி. வெளி வராண்டா, மாடிப்படி, மொட்டைமாடி என்று நள்ளிரவு கடந்து காற்றுக்காக ஏங்கி அலைந்துக் கொண்டிருந்தேன்.

மின் விசிறியின் சுழற்சியில் இத்தனைநாளும் மயக்கம் கொண்டே தூங்கிப் போயிருக்கின்றோம். அதன் சுழற்சி தடைப்பட்ட போது செயற்கைக் காற்றை உருவாக்கி வைத்து கொண்டுதான் நாம் சுவாசம் செய்துக் கொண்டு இருக்கின்றோமோ என்ற பயம் தொற்றிக் கொண்டு விடுகின்றது. காற்று வெறும் சுவாசத்திற்கு மட்டும்தானா அல்லது நம் உடம்பும் காற்றை சுவாசிக்கின்றதா என்ற எண்ணம் தோன்றுகின்றது. சீரான முறையில் சுவாசித்தாலே நோய் இன்றி வாழவும் உடல் மற்றும் மனதை திடமாக வைத்துக் கொள்ளலாம் என்று யோகா கற்றுத் தருகின்றது. அதி காலை வேளையில் காற்று வாங்குவதற்காகவே கடற்கரையை நாடி ஏன் இத்தனை கூட்டம் செல்கின்றது.

காற்றுக்காக நாம் எவ்வளவு ஏங்கி இருக்கிறோம் என்பதையும், காற்றுக்கு வேலிக்கட்ட முடியாது என்ற பழமொழியை செல்லாததாக்கிவிட்டு காற்றுக்காக காத்திருக்கவும் காற்றைத் தேடிச் செல்லவும் துவங்கி விட்டோம் என்பதை பாதி தூக்கம் பறிபோன நிலையில் நன்கு உணர முடிந்தது.

இறந்துக் கொண்டிருந்த மிருகத்திலிருந்து வெளிபடும் மூச்சை போல் விட்டுவிட்டு சிறிது சிறிதாய் வீசியக் காற்றில் பின்னிரவுக்கு மேல் கண்ணயர்ந்து தூங்கிப் போய்விட்டேன். காலையில் எழுந்த போது உடம்பு முழுதும் வெப்பமேறிப் போய் மோத்திரம் கடுத்துவிட்டிருந்தது.



------------------------------------////////---------------------------------------------


குறிப்பு; - தலைப்பு எஸ.ராவின் ‘சிறிது வெளிச்சத்தை’ நினைவுப் படுத்தும் நானும் அவ்வண்ணமே இத்தலைப்பை தேர்ந்தேன். முதலில் வேறு தலைப்புதான் இட்டிருந்தேன் இது இதற்கு பொருந்தும் என்பதால் இதுவே வைத்து விட்டேன். மேலும் நேற்று என்பது கடந்த வெள்ளி இரவு.




அன்புடன்…
ஆ.முத்துராமலிங்கம்

Read more...

மூன்று கவிதைகள்

Thursday, May 28, 2009

தலைபற்ற இரண்டுக் கவிதை

நீ விரட்டிய
பிரகாரப் புறாக்கள்
வட்டமடித்து விட்டு
மீண்டும் வந்தமருகின்றது
உன் விரட்டலை யாசகம்
பெற.
நீ மீண்டும் கைகளை வீசுகின்றாய்
உன்னில் விரிந்து மறைகின்றது
ஒரு பறவையின் சிறகு.
-*-

உன் சுவடுகளைப் பின்பற்றி
நடக்க துவங்குகின்றேன்
நீண்டுச் செல்லும் உன் பாதை
என்னை குழந்தையாக்கி கூட்டிச்
செல்கின்றது.
நான் பருவங்களை இழந்து
பின்னோக்கி தவழத் துவங்குகையில்
உன் சுவடுகளை அழித்தபடி
என்னை முந்திச் செல்கின்றது மழை.
-*-

கொக்கு
அதன் வென்மை நிரம்
இயல்பாகவே பிடித்த ஒன்று
நீண்ட கால்களும் வளைந்த கழுத்தும்
புரியாததொரு கேலித்தளுடன் அதை
ரசிக்கச் செய்து விடும் எப்பொழுதும்.
மேலும் கீழுமாக ஏறிஇறங்கிச் செல்லும்
அதன் நடை பார்க்கச் சலிக்காதொன்று.
நீண்ட நேரம் காத்து நின்று
சட்டென்று ஒரு கனத்தில் வெகு லாவகமாக
நீந்தியலைந்த மீனொன்றை கொத்திப்
பறந்துச் செல்லும் அதன் சாமர்த்தியத்தை
விழி மூழ்கி ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
துடிதுடித்து இறந்துக் கொண்டிருக்கின்றது
அதன் கூரிய நகத்துக்குள் அகப்பட்டிருந்த மீன்.


Read more...

விசித்திரி.

Tuesday, May 26, 2009



நேர்த்தியாக வரைபப்பட்ட ஓவியமொன்றின்
முதல் கோடுத் தேடி பயணிக்க துவங்குகின்றேன்.
வர்ணங்களில் சிதைந்திருக்கும் பிம்பங்கள்
ஒவ்வொன்றாய் மீட்டெடுத்துச் செல்கையில்
இழந்து கொண்டே வருகின்றேன் என் முகங்கள்
ஒவ்வொன்றாய். மலை உச்சியிலிருந்து விழும்
அருவியின் பேரிரைச்சல் தற்கொலைக்கான
காரணங்களை சத்தமாகக் கூறுவதாகவும்
உதிரந்த சருகுகளின் சரசரப்புகள் வாழ்தலின்
பிசுருகளாக நீங்கிவிட்ட ஏக்கங்களை
முனுமுனுப்பதாகவும் பசித்தக் குழந்தையின்
வீங்கிய கன்னமும் முலையொட்டிய ஒரு தாயின்
கண்ணீரும் வெவ்வேறு வண்ணங்களில் படிந்திருப்பதை
எச்சில் கொண்டு அழித்து விடுகின்றேன்.
கூடு விட்டு வெகுதூரம் இரைத் தேடிச் செல்லும்
பறவையின் தவிப்பை சிறகுகளின் கீழான
சிறுக் கோடு காட்டிவிடுகின்றன.
இன்னும் என் பயணத்தை நீட்டியிருக்கையில்
காடு மலை நதி கடல் என கடந்துச்
செல்கின்றது. எதிலும் என் தேடுதலுக்கான
முடிதலின்றி முடிவற்று நிர்க்கையில் காலடியில்
விரியத் துவங்குகின்றதொரு வர்ணங்களற்ற வெளி.
நான் துவக்கத்தை கண்டெடுக்க முடியாதவனாய்
திரும்புக் கொண்டிருக்கின்றேன் வர்ணங்களப்பிய
மேனியுடன் அழிந்திருந்த ஓவியத்திலிருந்து
உயிர் பெற்றவனாய்.

Read more...

வலையைக் கடித்த எலி

Sunday, May 24, 2009


நண்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்
மொதல்ல நான் யாருன்னு சொல்லிகிரேன்… நான்தாங்க ‘பதின்மரக்கிளை’ன்னு பதிவுள கவிதை எல்லாம் எழுதிகிட்டு இருந்தவன்.

என் வலை முடிந்த 18-05-2009 அன்று ஏதோ ஒரு சுப லக்கனத்தில் நல்ல நேரம் இரவு 12 மணிக்கு மேல் யாரும் விழித்திராத போது கவனிக்காமல் விடபட்ட கொடிய நோயால் (அதாங்க ntamil உண்டு பண்ணிய வைரஸ்) சமாதி நிலை அடைந்து விட்டதை வருத்தத் தோடு தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் துக்கம் நடந்த வீட்டுல உடனே ஒரு நல்லகாரியம் நடக்கனும்னு பெரியவங்க சொல்லுவாங்க அதனால நான் கையோட இந்த புதிதாக இந்தத் தளத்தை துவங்கியுள்ளேனுங்க (எல்லாம் உங்க மேல உள்ள தைரியத்துலதான்).

இப்ப மேட்டருக்கு வரேன்!
எனக்கு 18-05-2009 அன்று என்னுடைய ‘முடிச்சு’க் கவிதைக்கு (அது முடிஞ்சி போன ஒன்னுங்குறீங்களா) நண்பர் ஆதவா பிண்ணூட்டமாக
உங்கள் தளத்தில் ntamil.com மால்வேர் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. தேவையற்ற தளங்களின் தொடுப்புகளை நீக்கிவிடவும்”.
என்று எச்சரித்திருந்தார். எனக்கு அதை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் அதற்கான அக்கறை இன்றி நிதானமா ntamiலை நீக்கி விடலாம் என்று இருந்து விட்டேன். அதுதான் என்னக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பு!!!. (சுயபுத்திதான் இல்ல சொல்புத்தியுமா இல்லங்கரது இதுதானோ) இரவு 11 மணிவரை நண்பர்களுக்கு பிண்ணூடமிட்டு விட்டுதான் அன்று சென்றேன். அது வரைக்கும் நல்லாதான் இருந்தது மறுநாள் காலையில் (19-05-2009) அன்று என் கனைக்கை திறந்த போது அதிர்ச்சி. என் டேஸ்போர்டில் ‘பதின்மரக்கிளை’ இல்லை. அதிர்ந்து போய் என் வலை முகவரியை (http:muthu5.blogspot.com) தேடினேன்...
Blog has been removed
Sorry, the blog at muthu5.blogspot.com has been removed. This address is not available for new blogs.
Did you expect to see your blog here? See: 'I can't find my blog on the Web, where is it?'


இப்படி அழிந்து விட்டதாக வந்தது. விசயம் என் திர்ச்சியை மீறிவிட்டிருந்தது புரிந்தது. உடனே நண்பர் ஆதவாவிற்கு ஒரு குறுந்தகவல் ஒன்றை அனுப்பினேன் அவர்தான் என் பிரச்சனை என்ன என்பதை அறிந்து ஒரு சுட்டியை அனுப்பினார். இதை கிளிக் செய்து நீங்களும் பார்க்கலாம்….
என் பதின்மரக்கிளை இங்கு உள்ளது பார்க்க மட்டுமே செய்யலாம்.

இதில் ntaml மற்றுப் gumblar இவ்விரண்டிலும் வைரஸ் உள்ளதாகவும் அதன் விளைவாக என் வலையை தற்காலிகமாக அழித்து விட்டதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் கூகிலிடம் தளத்திற்குரியவர் கேட்டுக் கொண்டால் திரும்ப தரப்படும் ஆனால் எப்பன்னு எங்களுக்கே தெறியாது (வரும் ஆனா வராது… ங்ர கதை) என்று சொல்லப்பட்டு விட்டது.

இப்படி நம்மிற்கு தெரியாமலோ அல்லது கவனக்குறைவாலோ இது போன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்து விடும் அபாயம் பெருகிவிட்டது. ஆதலால் நண்பர்களே நம் தளத்தை பாதுகாக்க சற்று கவனம் கொள்ளுங்கள் (இது கூட தெரியாத உன்னமாதிரி முட்டால் இல்ல நாங்கன்னுரவங்க விட்டுடலாம்). நம்மளுடைய பதிவை மாதம் ஒரு முறையாவது சேமித்து வைத்துக் கொண்டால் நல்லது.
இப்படி செய்க;
Blog - Settings - Export a blog - Download Blog
அடுத்ததாக இதே போல் டேஸ்போர்டின் கீழ் இருக்கும் Webmaster Tools னுள் சென்று நம் வலைத்தளம் என்ன நிலையில் உள்ளது என்று பார்த்துக் கொள்ளலாம்.

வைரஸ் தாக்கப்பட்ட என் தளத்தின் தகவல்களை கீழே பாருங்கள்


நம் தளம் நள்ள முறையில் இருந்தாள் அனைத்துப் பகுதியிலும் 'டிக்' செய்திருக்கும் தளம் பாதிக்கப் பட்டிருந்தால் 'அபாயக்' குறியிட்டு அதற்க்கான விளக்கமும் கொடுக்கப் பட்டிற்கும்.
இதைப் பற்றி மேலதிக விபரம் தெரிந்தவர்கள் பிண்ணுட்டத்தில் தெரிவியுங்கள், மேலும் மூத்தப் பதிவர்கள் இது பற்றி தெளிவானதொரு பதிவை இட்டால் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று என்னுகின்றேன்.

தளத்தை பறிகொடுத்தவன் என்ற முறையில் இதை வலியுறுத்தி உங்களுடன் பகிர்ந்து கொண்ண்டேன். முடிந்த அளவு தளத்தை பாதுகாக்க கவனம் கொள்ளுங்கள் அவ்வளவே இப்பதிவின் நோக்கம்.

இன்னும் தலைப்புசார்ந்த ஒரு எலியை ச்சி.. ச்சி.. வரியைக் கூட கானுமேன்னு தேடுறது புரியுது. அது என்னன்னா... நம்ம கனிணியில் வால் புகுத்தி மேஜையில் படுத்திருக்குமே... எலி அத கொஞ்சம் கவனமா உபயோகப் படுத்துங்க கண்ட இடத்துல மேய விட்டா இப்படிதான் நம்ம வலையையே கடிச்சு நாசம் பண்ணிரும்.


நன்றி.
என்றும் அன்புடன்,
ஆ.முத்துராமலிங்கம்.

Read more...

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP