தங்கம் இட்லிக் கடை (போட்டிச் சிறுகதை)

Monday, June 8, 2009

ந்த அறை அவ்வளவு போதுமானதாய் இல்லை. பத்துக்கு எட்டு இருக்கும், ஏற்கனவே ஆறு பேர் ஊடால அவனும். படுக்கவே சிரமமா இருந்தது. மஞ்சள் ஒளியைக் கசிந்த படி ஒரே ஒரு முட்டை விளக்கு மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. மின்விசிறியைத் தேடினான் அது வலது மூலையில் துருபிடித்த கம்பிகளுக்குள் சன்னமாக சுழன்றுக் கொண்டிருந்தது. மின்விசிறியை விட பக்கத்தில் படுத்திருந்த நபரின் மூச்சுக் காற்று வேகமாக வந்தது. அவனுக்கு அந்த சூழலே ஒரு வினோத உணர்வாய் பட்டது. ஏதோ ஒரு மனச் சங்கடம் தொண்டையில் அடைத்து நின்றது. இப்பவே இந்த அறையை விட்டு வெளியேறிடலாமா… சென்றால் எங்கு செல்வது? குழப்பம் கவ்விக் கொண்டது. வெளிப்பட்ட கண்ணீரை இமையால் உருஞ்சிக் கொண்டான். வெளியில் கடந்துச் சென்ற இரயில் சப்தம் அவன் மனநிலையை ஒத்திருந்தது.

நண்பன் தயவுல‌ தான் அந்த இடமும் கிடைத்தது. வீராப்பா ஊர்ல இருந்து கிளம்பி வந்து திக்கற்று நின்னப்ப அவன்தான் உதவினான். அவனும் இப்படிதான் ஊரவிட்டு வந்து நல்ல வேலைய தேடிக் கொண்டான். எப்படி கஷ்ட்டப் பட்டாவது நாமும் ஒரு நல்ல வேலைய தேடிக்கனும் வைராக்கியம் மட்டும் உறைந்திருந்தது. ‘சும்மா ஊரச் சுத்திட்டு நேரநேரத்துக்கு தின்னுட்டு திரிர உனக்கும் நாம வளக்கிர ஆடு மாட்டுக்கும் என்ன வித்தியாசம்’ தங்கையின் கேள்வி மனதை அழுத்தியது. ...ம் எப்படியும் நம்ம படிச்ச படிப்புக்கு நல்ல வேலை கிடைக்கும், நம்பிக்கையை மனதில் ஊற்றிக் கொண்டு கண்களை மூடினான்.

முதல் நாளே தெரிந்து விட்டது மேன்சன் வாழ்க்கைப் பற்றி. தனியுடமை அங்கு அடியோடு ஒழிக்கப்பட்ட ஒன்று பொது உடமைதான் பிரதானம் என்பதை புரிந்துக் கொண்டான்.

‘ரமேஷ் வா கிளம்புவோம் எனக்கு டைமாயிடுச்சி’ அவசரப்படுத்தினான் நண்பன் தனசேகர்.

முதல் நாள் என்பதால் நன்றாக அவனை தயார் படுத்திக் கொண்டிருந்தான்,
முகச்சவரம், உடை, வாசனைத்திரவியம் என்று மேலும் மெருகேற்றிக் கொண்டு கிளம்பினான்.

ஒடிசலானத் தெரு நீண்டு ஒரு இடத்தில் வளைந்துச் சென்றது. முகம் தெரியாத மக்கள் ஏதேதோ பிணைப்பில் அவரவர் காரியம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். நகரத்தின் தோற்ற மிரட்சியும் எதோ ஒரு அயர்ச்சியும் அவன் மனதில் படிந்ததிருந்தது. மூச்சை நன்கு உள்ளிழுத்து விட்டுக் கொண்டவானாய் நண்பனுடன் சென்றான்.

‘இங்கதாண்டா சாப்பிடுவது என்றபடியே முன் கிடந்த பிலாஸ்டிக் இருக்கையை இழுத்தபடி அமர்த்தினான். நேர் எதிரில் நன்கு துடைக்கப்பட்ட கரும்பலகையில் ‘தங்கம் இட்லிக் கடை’ ‘டிபன் ரெடி’ என்று தடித்த எழுத்தில் வெள்ளையாக சிரித்தது.

‘வாங்க தனசேகர் என்ன நேற்று ஆளையேக் காணோம்’ என்றபடியே இட்லி தட்டை இறக்கிக் கொண்டிருந்தார் கனேசன்.

‘இல்லண்ண இது நம்ம ஃபிரண்டு நேத்து ஊர்லருந்து வந்திருந்தான் இவனக் கூப்பிட்டு கொஞ்சம் வேலையா வெளிய போயிட்டேன்’ பதில் சொல்லி விட்டு இரண்டு நாலு என்றான்.

‘தம்பி உங்க ஊருதானா. என்ன விசயமா வந்திருக்காங்க’ இரண்டு தட்டில் நான்கு நான்கு இட்லியை வைத்துக் கொடுத்தபடிக் கேட்டார்.

‘ஆமாண்ண எங்க ஊருதான் வேலை தேடி வந்திருக்கான். நிறைய‌ படிச்சிருக்கான். ஏதாவது தெரிஞ்ச கம்பனி இருந்தா சொல்லுங்கண்ண’

‘எனக்கு தெரிஞ்சது ஒன்னுமில்லை தம்பி தெரிஞ்சவங்கக் கிட்ட கேட்டுப் பார்க்கறேன்’ என்று சின்ன முறுவலுடன் கூறி விட்டு மற்றவர்களுக்கு பரிமாற துவங்கினார்

தெருவோரக் கடை. போரவாரங்க விழியுற்றுச் சாப்பிட‌ ரமேசுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அதுவும் பரிமாறிய அவரை பார்கவே சகிக்கலை. அழுக்கான லுங்கி முட்டை அளவில் உள்ள இரண்டு மூன்று ஓட்டையுள்ள பெனியன் அடர்ந்த தாடி என பார்க்க வறட்சியாக இருந்தார். அவனுக்குள் தயக்கமும் கூச்சமும் நெலிந்துக் கொண்டிருந்தது வெளிபடுத்திக் கொள்ளவில்லை.

சாப்பிட்டு முடியவும் தனசேகருக்கான பேரூந்து வர ஓடிச் சென்று ஏறிக் கொண்டவன் கண்ணாடி வழியாக குனிந்து பெருவிரலை உயர்த்திக் காட்டி விட்டு மறைந்தான்.

நண்பன் சொல்லி இருந்தக் கம்பனிக்கு சென்று வந்தான் ரமேஷ். மீண்டும் இரவு இட்லிக் கடையில் சாப்பிட்டபடி அக் கம்பனியில் பணியிடம் காலி இல்லை என்பதை நண்பனிடம் தெரிவித்துக் கொண்டான். நண்பனும் அது போகட்டும் நாளைக்கு வேரொருக் கம்பனியில் கேட்டிருக்கேன் அங்கு சென்று பார்க்கலாம் என்று தைரியமூட்டினான். இன்னும் நிறைய‌ பேசிவிட்டு அறைக்குச் சென்றனர்.

நாட்கள் மெல்ல நகரத் துவங்கியது. சென்னையின் விகாரத் தோற்றம் ஒவ்வொன்றாய் பாம்பின் சட்டையென உறிந்துக் கொண்டே இருந்தது அவனுக்குப் புரிந்தது. இந்த ஒரு மாதத்தில் அவன் ஏறிஇறங்காத கம்பனிகளே இருக்காது. ஒவ்வொருக் கம்பனியிலும் ஏதாவதொரு காரணம் இருந்தது நிராகரிப்பதற்கு. கிராமத்துப் படிப்பை வைத்துக் கொண்டு ஒரு மசுரும் செய்ய முடியாது போல… சலித்துக் கொண்டான். நம்பிக்கை வற்ற துவங்கி வாழ்க்கை நசுக்க துவங்கியது. சாப்பிடுவது இரண்டு வேலையே அதிகமென நினைத்துக் கொண்டான். சில நாட்கள் ஒரு பொழுதே போதுமானதாக இருந்தது அதுவும் சாப்பாடு உபயம் நண்பன்தான். போக போக நண்பனுக்கு பாரமாக இருக்கின்றோமோ என்ற எண்ணமும் அவனை உறுத்த ஆரம்பித்து விட்டது.

அன்றைய பொழுதும் அதுபோலவே திரும்பிய போது கையில் காசில்லாமல் பேரூந்தில் தூங்கியவாரு நடித்தே வந்தது அவனை புழுவாக நெலியவைத்தது. அவன் மீதான நம்பிக்கை சாலைப்பூக்களைப் போல் நசுக்கப்பட்டிருந்தது. துவண்டு போய் கடற்கரையில் படுத்துறங்கிவிட்டு இரவு அறைதிரும்பினான். வழியில் வழக்கம் போல் இட்லிக் கடையில் சாப்பிட‌ அமர்ந்தான்.

ஒரு வாரத்தாடியும், கசங்கிய சட்டையுமாக உடைந்து உட்கார்ந்திருந்த அவனைப் பார்த்த கனேசன் ‘என்ன தம்பி டல்லா இருக்கீங்க. நானும் கொஞ்ச நாளா பார்க்கிறேன் முன்ன மாதிரி இல்ல நீங்க’ என்று வாஞ்சையோடுக் கேட்டார். அவனுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை.
ஆனால் அவரிடம் மனம் விட்டு பேசிவிடலாம் போல இருந்தது.

‘…..’ வறண்ட உதடு மட்டும் சிறிதாய் விலகியது.

‘இன்னும் வேலை கிடைக்கலையா’ மீண்டும் அவரேக் கேட்டார்.

ஆமாம் என்பதாய் தலையசைத்து விட்டு கவிழ்த்துக் கொண்டான்.
சிறிது மௌனத்திற்கு பின் கோபம் வந்தவனாக ‘…ச்சீ என்ன வாழ்க்கை இது படிச்ச படிப்புக்கு ஒரு வேலையில்ல….’ வெறுப்பை உமிழ்ந்தபடி மிச்ச வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.

அவர் இட்லித்தட்டை நீட்டியபடி ‘இதுக்கா தம்பி வெறுத்துப் போயிட்டீங்க’
வெகு சாதரணமாகக் கேட்டார்.

‘…….’ அவனுக்கு சுறுக்கென்றது. சட்டென வரண்ட கோபமும் ஒரு வெறுமையும் அவன் உடலில் பரவியது, வார்த்தையேதும் இல்லை.

அவர் முகத்தில் எப்பவும் ஓடும் அதே புன்னகையை தவள விட்டபடியே
ஆரம்பித்தார்…

‘இதே வெறுப்பைதான் தம்பி நானும் பத்து வருசத்துக்கு முன்னாடி அனுபவிச்சேன். ஆனா இப்ப எதுமீதும் வெறுப்பே இல்லை. பிகாம் படிச்சி முடிச்சிட்டு வேலை தேடி அலைஞ்சப்ப உதவி பண்ணக்கூட யாரும் இல்ல எனக்கு. படிச்சப் படிப்பு இருக்கு அது நம்மள காப்பாத்தும்னுதான் நானும் தன்னந்தனியா அலைஞ்சு திரிஞ்சேன். பசித்த வயிறும் விழித்த இரவும் நீண்டதே தவிற வேரெந்த புரோஜனமும் இல்லை. கடலலையும் மரஇலையும் தான் என்னை அதிகம் புரிந்திருக்கும். சட்டென்று அவர் முகம் மாறியிருந்தது, புன்னகை அழிந்து போய் இருக்கம் கொண்டிருந்தது. சின்ன இடைவெளி விட்டு அவரே தொடர்ந்தார். ஆனா நான் தளரலியே இந்தா இந்த இடத்துல தான் டீ விற்க ஆரம்பிச்சேன், முதல்ல கஷ்ட்டமாதான் இருந்துச்சு ஆனா வைராக்கியமும் இருந்துச்சு, அப்புறம் போக போக எல்லாம் பழகிடுச்சி இப்பபாருங்க எனக்கு எந்த குறையுமில்ல. சந்தோசமா வாழ்க்கை அமைஞ்சிருச்சு. உழைக்க மனமும் தன்நம்பிக்கையும் இருந்தா வேலை தேட வேண்டிய அவசியம் இல்லை வேலை செய்யலாம் இதுதான் தம்பி நான் வாழ்க்கயில் கத்துக்கிட்டது. உங்களுக்கு இன்னும் வயசு இருக்கு மனச தளரவிடாதீங்க.’ முடித்தவர் கண்ணோரம் ஈரமாகி இருந்ததை இமையால் துடைத்துக் கொண்டு மீண்டும் அவர் வேலைக்கு திரும்பிக் கொண்டார்.

எப்பவும் தெரிவது போல் இல்லை அவர் வேறொரு தோற்றத்தில் தெரிந்தார். அதுவரை அவர் மீதான தோற்றபிம்பம் உதிர்ந்து சட்டென்று ஒரு நெருக்கம் உண்டானதை உணர்ந்தான்

அவன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று கூட தெரியவில்லை ஆனால் வழக்கத்தை விட அதிகமாய் சாப்பிட்டு இருப்பதாக உணர்ந்தான். கண்களில் நீர் கட்டியிருந்தது. சொல்ல முடியாததொரு நிம்மதியும் நம்பிக்கையும் அவனிடம் துளிர்த்தது. ஏதோ ஓர் முடிவு கொண்டவனாய் அறை வந்தான். எல்லோரும் படுத்து போக மீதமிருந்த காலருகில் படுத்துக் கொண்டான்.
அந்த இடம் அவனுக்கு போதுமானதாய் இருந்தது.


-----------------/////////////-----------------------


குறிப்பு:-


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

20 comments:

ஆ.முத்துராமலிங்கம் June 8, 2009 at 8:44 PM  

(அப்பாடா... நானும் கதை எழுதியாச்சு)

எனக்கு கதை எழுதவது அத்தனை சுலபத்தில் வராது. இருந்தும் ஆர்வத்தில் களந்துக் கொண்டேன்.

குறைகளை சுட்டிக் காட்டுங்கள். முக்கியமா எழுத்துப் பிழைகளை சொல்லிக் கொடுங்கள்.

(நன்றி என்னையும் சகிப்பதற்கு)

Cable Sankar June 8, 2009 at 9:04 PM  

நல்லாருக்கு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் June 8, 2009 at 9:19 PM  

வாழ்த்துகள் நண்பா

ஆ.ஞானசேகரன் June 8, 2009 at 9:28 PM  

கதை ஓட்டமும் முடிவும் நல்லா இருக்கு நண்பா!

vinoth gowtham June 8, 2009 at 10:14 PM  

ரசித்து படித்தேன் ரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள் நண்பா வெற்றி பெறுவதற்கு..

டக்ளஸ்....... June 8, 2009 at 10:27 PM  

நீங்க சொன்னதால,

ஒவ்வொறு‍-ஒவ்வொரு
தயவுள-தயவுல‌
நிரைய-நிறைய‌
சாபிட-சாப்பிட‌

வாழ்த்துக்கள் கவிஞரே..!

புதியவன் June 8, 2009 at 11:09 PM  

எழுத்து நடை அருமை...ஒரு நிறைவான கதை படித்த திருப்தி மனதில் பரவுகிறது...

போட்டியில் வெற்றி பெற
வாழ்த்துக்கள் முத்துராமலிங்கம்...

ஆ.முத்துராமலிங்கம் June 8, 2009 at 11:11 PM  

@Cable Sankar said...
நல்லாருக்கு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நன்றி சங்கர் சார்.
--------------------

@ஆ.ஞானசேகரன் said...
கதை ஓட்டமும் முடிவும் நல்லா இருக்கு நண்பா!

நன்றி ஞானசேகரன்.
--------------------

@vinoth gowtham said...
ரசித்து படித்தேன் ரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள் நண்பா வெற்றி பெறுவதற்கு..

ரொம்ப நன்றி நண்பா.
---------------------

@டக்ளஸ்....... said...
நீங்க சொன்னதால,

ஒவ்வொறு‍-ஒவ்வொரு
தயவுள-தயவுல‌
நிரைய-நிறைய‌
சாபிட-சாப்பிட‌

வாழ்த்துக்கள் கவிஞரே..!

எழுத்துப் பிழையை சொல்லித் தந்தமைக்கு மிகவும் நன்றி டக்லஸ்..
திருத்திக் கொள்கின்றேன்.

ஷண்முகப்ரியன் June 8, 2009 at 11:12 PM  

உங்களுக்கு நடை நன்றாக வருகிறது.சந்திப் பிழைகளைக் கவனமாகக் கையாண்டு தவிர்த்தாலே பாதி எழுத்துப் பிழைகள் குறையும்.
உங்கள் முயற்சியில் வெல்ல எனது வாழ்த்துக்கள் ஆ.மு.

ஆ.முத்துராமலிங்கம் June 8, 2009 at 11:12 PM  

@புதியவன் said...
எழுத்து நடை அருமை...ஒரு நிறைவான கதை படித்த திருப்தி மனதில் பரவுகிறது...

போட்டியில் வெற்றி பெற
வாழ்த்துக்கள் முத்துராமலிங்கம்...

ரொம்ப நன்றி புதியவன்.

ஆ.முத்துராமலிங்கம் June 9, 2009 at 1:03 AM  

ஷண்முகப்ரியன் said...
உங்களுக்கு நடை நன்றாக வருகிறது.சந்திப் பிழைகளைக் கவனமாகக் கையாண்டு தவிர்த்தாலே பாதி எழுத்துப் பிழைகள் குறையும்.
உங்கள் முயற்சியில் வெல்ல எனது வாழ்த்துக்கள் ஆ.மு.

வணக்கம் வாங்க ஷண்முகப்பிரியன் சார். உங்கள் அறிவுரைக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் June 9, 2009 at 1:25 AM  

நம்பிக்கை ஊட்டும் நல்ல கதை நண்பா.. கோதால நீங்களும் இறங்கிட்டீங்க.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..:-)

மாதவராஜ் June 9, 2009 at 10:53 AM  

நண்பா!

மனதை பாதிக்கிற விஷயம். பரிசு பெற வாழ்த்துக்கள்.

பிரியமுடன்.........வசந்த் June 9, 2009 at 11:12 AM  

மன நம்பிக்கை தருகிறது

வெற்றி பெற வாழ்த்துக்கள்

கவிஞரே

மயாதி June 10, 2009 at 5:19 AM  

நண்பரே உங்களுக்கான என் விருதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
இந்த லிங்கை வந்து பாருங்கள்.
http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_10.html

தீப்பெட்டி June 10, 2009 at 7:58 AM  

கதை நன்றாக இருக்கிறது..
வெற்றி பெற வாழ்த்துகள்..

Anonymous June 10, 2009 at 8:20 AM  

வாழ்த்துகள் நண்பா

ஆ.முத்துராமலிங்கம் June 10, 2009 at 6:58 PM  

நன்றி - மாதவராஜ் சார்.
நன்றி - வசந்த்
நன்றி - மயாதி
நன்றி - தீப்பெட்டி
நன்றி - ஆனந்த்


(உடனேயே வந்து நன்றி சொல்ல இயலவில்லை வேலை பளு)

Kalpagam July 1, 2009 at 3:08 AM  

நல்ல பாஸிடிவ்வான கதை! வாழ்த்துகள் நண்பரே!

இரு வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய “காற்றுக்கென்ன வேலி” சிறுகதையும் இதே கருவைக் கொண்டதுதான்.. எப்போதும் இந்தக் கருவிற்கு ”வேலை” இருக்கும் போலிருக்கிறது :-))

கே.பாலமுருகன் July 1, 2009 at 3:45 AM  

80களில் வெளிவந்த "வறுமையின் நிறம் சிவப்பு" என்பது போன்ற பாணியில் எழுதப்பட்ட (நவீன மொழியில்) கதாஇயாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

கதையை ஒரு முரணான உச்சத்திற்குக் கொண்டு போய் உடைத்து யதார்த்திற்குக் கொண்டு வருவது தற்பொழுது கையாளப்படும் உத்தி. ரஷ்ய காலத்திலேயே பலர் இந்த உத்தியைக் கையாண்டுள்ளார்கள்.

எனது "அப்பா வீடு" கதையும் இது போன்ற உத்தியின் பயன்பாடுதான். மேலும் வேலை இல்லாத விரக்தி, திண்டாட்டம், நடைமுறை வாழ்வில் கதைகளாவும், சினிமாவாகவும் கேட்டு சலித்து போனதாக இருந்தாலும், மொழிநடை கவர்கிறது. வாழ்த்துகள் நண்பரே.

கே.பாலமுருகன்
மலேசியா

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP