மீன் தொட்டி. >மூன்று கவிதைகள்

Thursday, June 25, 2009


உன் அருகாமை வெப்பத்தை
பருகி மூச்சடைத்துக் கிடக்கின்றேன்
வலியின்றி பிய்த்து போடுகின்றாய்
சிறகுகளை.
விழி அரும்பும் நீர்த்துளியென
ஆசைகள் ததுப்பி வழிய
உன் விரல் தொட்டழித்து
வெட்கத்தை ஊற்றி விடுகின்றாய்
மழையில் அழியும் தெருவோவியமாய்
கரைந்து கொண்டிருக்கின்றேன்
நாள் முழுதும்.
--*--நீ சலனமற்று மௌனங்களை
சிந்திக் கொண்டிருக்கின்றாய்
ஒவ்வொன்றாய் சேகரித்துக்
கொண்டே இருக்கின்றேன் நான்.
….
எப்படி எடுத்துச் செல்வது
பிரிகையில்…!
--*--


மீன் தொட்டியிலிருந்து துள்ளி விழுந்த
சிறு மீனாய் உன் விழிகளுக்குள் விழுந்து
கிடக்கின்றது என் இரவும் பகலும். நீ
என்னை அழைத்து சென்று கொண்டே
இருக்கின்றாய் நானறியா வனமொன்றில்
வேட்டை மானனெ.
--*--

:- கொஞ்சம் ரிலாக்ஸ்..........!

Read more...

“தொடர்”வண்டி கவிதைகள்

Tuesday, June 23, 2009


சப்தத்தை இரைத்துக் கொண்டு
புறப்பட தயாரான இரயிலை
அவதானித்து பாதையின் பின்
வழியில் நின்றிருக்ககையில்
இரயில் பற்றிய சமிக்ஞை
ஏதுமற்று தண்டவாளத்தில்
இறை தேடும் பறவையை
அன்னிச்சையாய் விரட்டுகின்றேன்
என்னை கவனியாத அச்சிறு பறவை
அருகாமையில் வந்த இரயிலை
கவிழ்த்து விடும் துணிச்சலுடன்
சிறகுகளை வீசிக் கடந்து செல்கின்றது.

--==--

கடந்து செல்லும் தொடர்வண்டியில்
கையசைத்து சென்ற குழந்தையின்
மென்விரல் பற்றி இரயிலிலேயே சென்று விட்டது
அதிகாலைச் சோம்பல்.

--==--

சோம்பல் முரித்தபடி
பாதையின் இடவலம் தாவி
செல்கின்றேன்.
அதிகாலைப் பனியில் விறைத்த
உள்ளங்கையை சூடாக்கி
கன்னத்தில் பரப்புகின்றேன்
எனக்குள் இயங்கத் துவங்குகின்றது
ஒரு இரயிலின் அசைவுகள்.
சக்கரங்களின் சுவடு
பதிந்திராத தண்டவாளத்தின்
இருபுறமும் முட்டி நின்ற வானம்
நோக்கி இரயிலின் சப்தத்தோடு கத்தி
அழைக்கின்றேன் மோதித் திரும்பும்
அதிர்வோசை சக்கரங்களற்ற என் சிறு
பிராயத்து இரயிலொன்றை இழுத்து
வருகின்றது. நான் நீள்வட்டக் கயிற்றில்
இரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை
கடந்து செல்கையில் என் வருகையில்
வெறுப்புற்று எழுந்து செல்கின்றான்
மலம்கழித்தவன்.

Read more...

இது பதிலல்ல….!

Sunday, June 21, 2009


ந்த கேள்விகள் ஒருவரை பற்றி தெரிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்டதாக தெரியவில்லை. பல கேள்விகள் அபத்தமாகவும், கேலித்தலுமாக உள்ளது. இதை உருவாக்கியவர் வெறும் பொழுது போக்கு நோக்கத்தில் மட்டுமே உருவாக்கி இருக்கக் கூடும் என்பது என் எண்ணம். அவ்வகையில் தொடர்ந்து நானும்….. என்னை அழைத்தவர் நண்பர் அன்புமணி
அவர்கள்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

தெரியவில்லை. அம்மா அப்பா வைத்தது.
பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அழுகை என்னோடு நிரந்தரமானது அதிக மகிழ்ச்சி, கோபம், ஏமாற்றம்,
வலி, துன்பம், பிரிவு எதிலிருந்தும் என்னை மீட்பது கண்ணீரே!
கடைசியாக என்றால் சமீபத்தில் அண்ணணின் குழந்தைக்கு
ஆபரேசன் அன்று.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கவே பிடிக்காது. அது நாளொரு வேசம் கொள்ளும்.
பத்து வரிகளுக்கு மேல் எழுதினாள் விரல்கள் நடுங்கிவிடும் அதன் பின்
கோடுதான் வரும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

பசித்த நிலையில் எதுவானாலும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அடிப்படையில் நான் ஒரு கூச்ச சுபாவம் உள்ளவன். யாரிடமும் நட்பை விரும்பவே செய்வேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டிலும்…

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவரை.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்த விசயம் முயற்சிப்பது. பிடிக்காத விசயம் எதையும் பாதியில் நிருத்தி விடுவது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இன்னும் ஒரு பாதிதான்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அம்மா, அப்பா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை நிற வேட்டி (கம்பனி யூனிஃபார்மே இதுதான்) மெல்லிய பச்சைநிரமும் வெள்ளை நிரமும் கலந்த சட்டை

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

கணினித் திரை. மின் விசிறியின் சப்தம்

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நல்லா எழுதுகின்ற பேனாவாக.

14.பிடித்த மணம்?

மல்லிகை

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

யாரையும் அழைக்கப் போவதில்லை.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?

எல்லா பதிவுகளுமே. அதிலும் குறிப்பாக என்றால் கவிதைகள், மற்றும் ‘திருச்சேறையில் எனது கோடைக்காலங்கள்’ இந்த பதிவு

17. பிடித்த விளையாட்டு?

சிறு வயதில் நிறைய. தற்போது மட்டை பந்து.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

நம்பும் படியாக. ரசிக்கும் படியாக.

20.கடைசியாகப் பார்த்த படம்?

lawrence of arabia

21.பிடித்த பருவ காலம் எது?

எல்லா காலமும்

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?’

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’
எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை தொகுப்பு

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதாவது.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது: மெல்லிய சப்தங்கள்
பிடிக்காத்து: வாகன இரைச்சல், இரவு டீவி சப்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சென்னை.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இல்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

எதுவென்று தெரியவில்லை. எல்லாமும் என்னிடமும் இருக்கலாம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன்பு கோபம். இப்போது சோம்பல்.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

மணப்பாடு, உவரி. நான் அதிகம் சுற்றுலா சென்றது இல்லை
இது சுற்றுலா தலமும் இல்லை. எங்க ஊர் அருகில் உள்ள
ஊர்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

யாருக்கும் தொந்தரவில்லாமல், சந்தோசமாக.

31.மனைவி (கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அந்த நிலை இல்லை.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

இன்னும் அந்த அளவுக்கு அனுபவமில்லை.
இன்னும் வாழ வேண்டும் அவ்வளவே.

Read more...

கொடிய பகலின் விசும்பல்கள்

Monday, June 15, 2009


வெளியெங்கும் பெருகி வழியும்
வெயிலை பட்டாம்பூச்சியின் சிறு
வாயால் குடித்துப் பார்க்கின்றேன்
தேனின் சுவையொத்திருக்க மயங்கித்
தள்ளாடுகின்றதென்னுடல்.
நடன அசைவுகளோடு துள்ளித்
தெரிக்கும் என் நிழல் இரவின்
ஆட்டங்களை கூச்சமின்றி
பகலில் நிகழ்த்துகின்றது.
அரூபமாய் விலகிக் கொண்டே
இருக்கும் என்னிலான என்னை
துரத்திப் பிடிக்க விழைகையில்
ஆதி மானெனத் துள்ளியோடி
இரவுக்குள் ஒளிகின்றது.
விசும்பலென மேலெழும் ஏக்கக்
குரல்களை மண் விலக்கி புதைத்து
விட்டு வெளிப்படுகையில் காத்திருந்த
வெயில் என்னை ஒரே மடக்கில் குடித்து
விட்டு வெறித்தலைகின்றது. மிச்சப்படும்
என் மூச்சு தும்பியென மேலெழுந்து ஓயாத
ரீங்காரத்தோடு கிளையற்ற மரமொன்றில்
துளையிட்டு அடைந்து கொள்கின்றது.
வேலிப்பூக்களின் நுகர்படாத மனமும்
சுடு மணலில் நீண்டு கிடக்கும்
குழந்தையின் கால் தடமும் அக் கொடிய
பகலை நீட்டிச் செல்கின்றது இரவுவரை.

Read more...

கனவுகளை வெளியெறிதல்.

Thursday, June 11, 2009

இது ஒரு மீள் பதிவு! என் பழைய தளமான ‘பதின்மரக்கிளை’யில் பதிவிட்டது. தற்போது அத்தளம் அழிந்து விட்டதால் அவ்வப்போது மீள்பதிவாக்கலாம் என்ற எண்ணம். புதிய நண்பர்களுக்கு இது ஒரு அறிமுகமாக இருக்கலாம் ஏற்கனவே படித்த நண்பர்கள் கொஞ்சம் அஜஸ் பண்ணிக்கங்கோ!! (இது உண்மை இல்ல தற்சமயம் பதிவிட ஒன்னுமில்லை அதான்)


------------------------------------------------------------------------------------------------


இப்ப கவிதை.....


நிசப்தம் கூடியிருந்த
அவ்விரவில் உன் கனவுகளை
விரித்துப் படுத்திருந்தேன்

இருளில் கரைந்திருந்த
நீ மெல்ல உருக்கொண்டு என்மீது
கவிழத் துவங்கினாய்

சாத்தி வைக்காத கதவைத் தாண்டிப்
பீறிட்டு வந்த அப்பூனையின் சப்தம்
நிசப்தத்தை உடைத்து விட்டு
உன்னைக் கொலை செய்திருந்தது.

*-*

உன் வருகையை
அவதானித்து
மதில் சுவரில் அமர்ந்திருந்தேன்
நேரம் கடந்து போவதை
நிழல் உறுதிபடுத்திக் கொண்டிருந்தது

மின் கம்பத்தில் அமர்ந்து
செல்லும் குருவிகளின் சுவடுகளை
பத்திரப் படுத்துவதாய் அதனின் நிழலை
அள்ளிக் கைகளுக்குள் அடைத்து வைத்துக்
கொண்ட போதும் அவைகள் சிரமமின்றி
விடுபட்டுப் பறந்து சென்று விட்டன

வெளியெங்கும் நான் விரித்து
வைத்திருந்த வலை அறுபடத்
துவங்கிய போது காலருகில்
நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த
பறவை போலவே பறக்க முடியாமல்
என்னைப் பின்தொடர்ந்தது:-உயிர்மையில் வந்தது

Read more...

தங்கம் இட்லிக் கடை (போட்டிச் சிறுகதை)

Monday, June 8, 2009

ந்த அறை அவ்வளவு போதுமானதாய் இல்லை. பத்துக்கு எட்டு இருக்கும், ஏற்கனவே ஆறு பேர் ஊடால அவனும். படுக்கவே சிரமமா இருந்தது. மஞ்சள் ஒளியைக் கசிந்த படி ஒரே ஒரு முட்டை விளக்கு மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. மின்விசிறியைத் தேடினான் அது வலது மூலையில் துருபிடித்த கம்பிகளுக்குள் சன்னமாக சுழன்றுக் கொண்டிருந்தது. மின்விசிறியை விட பக்கத்தில் படுத்திருந்த நபரின் மூச்சுக் காற்று வேகமாக வந்தது. அவனுக்கு அந்த சூழலே ஒரு வினோத உணர்வாய் பட்டது. ஏதோ ஒரு மனச் சங்கடம் தொண்டையில் அடைத்து நின்றது. இப்பவே இந்த அறையை விட்டு வெளியேறிடலாமா… சென்றால் எங்கு செல்வது? குழப்பம் கவ்விக் கொண்டது. வெளிப்பட்ட கண்ணீரை இமையால் உருஞ்சிக் கொண்டான். வெளியில் கடந்துச் சென்ற இரயில் சப்தம் அவன் மனநிலையை ஒத்திருந்தது.

நண்பன் தயவுல‌ தான் அந்த இடமும் கிடைத்தது. வீராப்பா ஊர்ல இருந்து கிளம்பி வந்து திக்கற்று நின்னப்ப அவன்தான் உதவினான். அவனும் இப்படிதான் ஊரவிட்டு வந்து நல்ல வேலைய தேடிக் கொண்டான். எப்படி கஷ்ட்டப் பட்டாவது நாமும் ஒரு நல்ல வேலைய தேடிக்கனும் வைராக்கியம் மட்டும் உறைந்திருந்தது. ‘சும்மா ஊரச் சுத்திட்டு நேரநேரத்துக்கு தின்னுட்டு திரிர உனக்கும் நாம வளக்கிர ஆடு மாட்டுக்கும் என்ன வித்தியாசம்’ தங்கையின் கேள்வி மனதை அழுத்தியது. ...ம் எப்படியும் நம்ம படிச்ச படிப்புக்கு நல்ல வேலை கிடைக்கும், நம்பிக்கையை மனதில் ஊற்றிக் கொண்டு கண்களை மூடினான்.

முதல் நாளே தெரிந்து விட்டது மேன்சன் வாழ்க்கைப் பற்றி. தனியுடமை அங்கு அடியோடு ஒழிக்கப்பட்ட ஒன்று பொது உடமைதான் பிரதானம் என்பதை புரிந்துக் கொண்டான்.

‘ரமேஷ் வா கிளம்புவோம் எனக்கு டைமாயிடுச்சி’ அவசரப்படுத்தினான் நண்பன் தனசேகர்.

முதல் நாள் என்பதால் நன்றாக அவனை தயார் படுத்திக் கொண்டிருந்தான்,
முகச்சவரம், உடை, வாசனைத்திரவியம் என்று மேலும் மெருகேற்றிக் கொண்டு கிளம்பினான்.

ஒடிசலானத் தெரு நீண்டு ஒரு இடத்தில் வளைந்துச் சென்றது. முகம் தெரியாத மக்கள் ஏதேதோ பிணைப்பில் அவரவர் காரியம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். நகரத்தின் தோற்ற மிரட்சியும் எதோ ஒரு அயர்ச்சியும் அவன் மனதில் படிந்ததிருந்தது. மூச்சை நன்கு உள்ளிழுத்து விட்டுக் கொண்டவானாய் நண்பனுடன் சென்றான்.

‘இங்கதாண்டா சாப்பிடுவது என்றபடியே முன் கிடந்த பிலாஸ்டிக் இருக்கையை இழுத்தபடி அமர்த்தினான். நேர் எதிரில் நன்கு துடைக்கப்பட்ட கரும்பலகையில் ‘தங்கம் இட்லிக் கடை’ ‘டிபன் ரெடி’ என்று தடித்த எழுத்தில் வெள்ளையாக சிரித்தது.

‘வாங்க தனசேகர் என்ன நேற்று ஆளையேக் காணோம்’ என்றபடியே இட்லி தட்டை இறக்கிக் கொண்டிருந்தார் கனேசன்.

‘இல்லண்ண இது நம்ம ஃபிரண்டு நேத்து ஊர்லருந்து வந்திருந்தான் இவனக் கூப்பிட்டு கொஞ்சம் வேலையா வெளிய போயிட்டேன்’ பதில் சொல்லி விட்டு இரண்டு நாலு என்றான்.

‘தம்பி உங்க ஊருதானா. என்ன விசயமா வந்திருக்காங்க’ இரண்டு தட்டில் நான்கு நான்கு இட்லியை வைத்துக் கொடுத்தபடிக் கேட்டார்.

‘ஆமாண்ண எங்க ஊருதான் வேலை தேடி வந்திருக்கான். நிறைய‌ படிச்சிருக்கான். ஏதாவது தெரிஞ்ச கம்பனி இருந்தா சொல்லுங்கண்ண’

‘எனக்கு தெரிஞ்சது ஒன்னுமில்லை தம்பி தெரிஞ்சவங்கக் கிட்ட கேட்டுப் பார்க்கறேன்’ என்று சின்ன முறுவலுடன் கூறி விட்டு மற்றவர்களுக்கு பரிமாற துவங்கினார்

தெருவோரக் கடை. போரவாரங்க விழியுற்றுச் சாப்பிட‌ ரமேசுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அதுவும் பரிமாறிய அவரை பார்கவே சகிக்கலை. அழுக்கான லுங்கி முட்டை அளவில் உள்ள இரண்டு மூன்று ஓட்டையுள்ள பெனியன் அடர்ந்த தாடி என பார்க்க வறட்சியாக இருந்தார். அவனுக்குள் தயக்கமும் கூச்சமும் நெலிந்துக் கொண்டிருந்தது வெளிபடுத்திக் கொள்ளவில்லை.

சாப்பிட்டு முடியவும் தனசேகருக்கான பேரூந்து வர ஓடிச் சென்று ஏறிக் கொண்டவன் கண்ணாடி வழியாக குனிந்து பெருவிரலை உயர்த்திக் காட்டி விட்டு மறைந்தான்.

நண்பன் சொல்லி இருந்தக் கம்பனிக்கு சென்று வந்தான் ரமேஷ். மீண்டும் இரவு இட்லிக் கடையில் சாப்பிட்டபடி அக் கம்பனியில் பணியிடம் காலி இல்லை என்பதை நண்பனிடம் தெரிவித்துக் கொண்டான். நண்பனும் அது போகட்டும் நாளைக்கு வேரொருக் கம்பனியில் கேட்டிருக்கேன் அங்கு சென்று பார்க்கலாம் என்று தைரியமூட்டினான். இன்னும் நிறைய‌ பேசிவிட்டு அறைக்குச் சென்றனர்.

நாட்கள் மெல்ல நகரத் துவங்கியது. சென்னையின் விகாரத் தோற்றம் ஒவ்வொன்றாய் பாம்பின் சட்டையென உறிந்துக் கொண்டே இருந்தது அவனுக்குப் புரிந்தது. இந்த ஒரு மாதத்தில் அவன் ஏறிஇறங்காத கம்பனிகளே இருக்காது. ஒவ்வொருக் கம்பனியிலும் ஏதாவதொரு காரணம் இருந்தது நிராகரிப்பதற்கு. கிராமத்துப் படிப்பை வைத்துக் கொண்டு ஒரு மசுரும் செய்ய முடியாது போல… சலித்துக் கொண்டான். நம்பிக்கை வற்ற துவங்கி வாழ்க்கை நசுக்க துவங்கியது. சாப்பிடுவது இரண்டு வேலையே அதிகமென நினைத்துக் கொண்டான். சில நாட்கள் ஒரு பொழுதே போதுமானதாக இருந்தது அதுவும் சாப்பாடு உபயம் நண்பன்தான். போக போக நண்பனுக்கு பாரமாக இருக்கின்றோமோ என்ற எண்ணமும் அவனை உறுத்த ஆரம்பித்து விட்டது.

அன்றைய பொழுதும் அதுபோலவே திரும்பிய போது கையில் காசில்லாமல் பேரூந்தில் தூங்கியவாரு நடித்தே வந்தது அவனை புழுவாக நெலியவைத்தது. அவன் மீதான நம்பிக்கை சாலைப்பூக்களைப் போல் நசுக்கப்பட்டிருந்தது. துவண்டு போய் கடற்கரையில் படுத்துறங்கிவிட்டு இரவு அறைதிரும்பினான். வழியில் வழக்கம் போல் இட்லிக் கடையில் சாப்பிட‌ அமர்ந்தான்.

ஒரு வாரத்தாடியும், கசங்கிய சட்டையுமாக உடைந்து உட்கார்ந்திருந்த அவனைப் பார்த்த கனேசன் ‘என்ன தம்பி டல்லா இருக்கீங்க. நானும் கொஞ்ச நாளா பார்க்கிறேன் முன்ன மாதிரி இல்ல நீங்க’ என்று வாஞ்சையோடுக் கேட்டார். அவனுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை.
ஆனால் அவரிடம் மனம் விட்டு பேசிவிடலாம் போல இருந்தது.

‘…..’ வறண்ட உதடு மட்டும் சிறிதாய் விலகியது.

‘இன்னும் வேலை கிடைக்கலையா’ மீண்டும் அவரேக் கேட்டார்.

ஆமாம் என்பதாய் தலையசைத்து விட்டு கவிழ்த்துக் கொண்டான்.
சிறிது மௌனத்திற்கு பின் கோபம் வந்தவனாக ‘…ச்சீ என்ன வாழ்க்கை இது படிச்ச படிப்புக்கு ஒரு வேலையில்ல….’ வெறுப்பை உமிழ்ந்தபடி மிச்ச வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.

அவர் இட்லித்தட்டை நீட்டியபடி ‘இதுக்கா தம்பி வெறுத்துப் போயிட்டீங்க’
வெகு சாதரணமாகக் கேட்டார்.

‘…….’ அவனுக்கு சுறுக்கென்றது. சட்டென வரண்ட கோபமும் ஒரு வெறுமையும் அவன் உடலில் பரவியது, வார்த்தையேதும் இல்லை.

அவர் முகத்தில் எப்பவும் ஓடும் அதே புன்னகையை தவள விட்டபடியே
ஆரம்பித்தார்…

‘இதே வெறுப்பைதான் தம்பி நானும் பத்து வருசத்துக்கு முன்னாடி அனுபவிச்சேன். ஆனா இப்ப எதுமீதும் வெறுப்பே இல்லை. பிகாம் படிச்சி முடிச்சிட்டு வேலை தேடி அலைஞ்சப்ப உதவி பண்ணக்கூட யாரும் இல்ல எனக்கு. படிச்சப் படிப்பு இருக்கு அது நம்மள காப்பாத்தும்னுதான் நானும் தன்னந்தனியா அலைஞ்சு திரிஞ்சேன். பசித்த வயிறும் விழித்த இரவும் நீண்டதே தவிற வேரெந்த புரோஜனமும் இல்லை. கடலலையும் மரஇலையும் தான் என்னை அதிகம் புரிந்திருக்கும். சட்டென்று அவர் முகம் மாறியிருந்தது, புன்னகை அழிந்து போய் இருக்கம் கொண்டிருந்தது. சின்ன இடைவெளி விட்டு அவரே தொடர்ந்தார். ஆனா நான் தளரலியே இந்தா இந்த இடத்துல தான் டீ விற்க ஆரம்பிச்சேன், முதல்ல கஷ்ட்டமாதான் இருந்துச்சு ஆனா வைராக்கியமும் இருந்துச்சு, அப்புறம் போக போக எல்லாம் பழகிடுச்சி இப்பபாருங்க எனக்கு எந்த குறையுமில்ல. சந்தோசமா வாழ்க்கை அமைஞ்சிருச்சு. உழைக்க மனமும் தன்நம்பிக்கையும் இருந்தா வேலை தேட வேண்டிய அவசியம் இல்லை வேலை செய்யலாம் இதுதான் தம்பி நான் வாழ்க்கயில் கத்துக்கிட்டது. உங்களுக்கு இன்னும் வயசு இருக்கு மனச தளரவிடாதீங்க.’ முடித்தவர் கண்ணோரம் ஈரமாகி இருந்ததை இமையால் துடைத்துக் கொண்டு மீண்டும் அவர் வேலைக்கு திரும்பிக் கொண்டார்.

எப்பவும் தெரிவது போல் இல்லை அவர் வேறொரு தோற்றத்தில் தெரிந்தார். அதுவரை அவர் மீதான தோற்றபிம்பம் உதிர்ந்து சட்டென்று ஒரு நெருக்கம் உண்டானதை உணர்ந்தான்

அவன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று கூட தெரியவில்லை ஆனால் வழக்கத்தை விட அதிகமாய் சாப்பிட்டு இருப்பதாக உணர்ந்தான். கண்களில் நீர் கட்டியிருந்தது. சொல்ல முடியாததொரு நிம்மதியும் நம்பிக்கையும் அவனிடம் துளிர்த்தது. ஏதோ ஓர் முடிவு கொண்டவனாய் அறை வந்தான். எல்லோரும் படுத்து போக மீதமிருந்த காலருகில் படுத்துக் கொண்டான்.
அந்த இடம் அவனுக்கு போதுமானதாய் இருந்தது.


-----------------/////////////-----------------------


குறிப்பு:-


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

Read more...

சகுனம் பார்க்கத் தெரியாதவன்

Friday, June 5, 2009


வர வர இடறிக்கொண்டே
இருந்தது. சகுனம் பார்க்கத்
தெரியவில்லை எனக்கு.
வரும் போது யாருடைய
முகத்தைப் பார்த்து வந்தேன்.
நினைவில்லை.
பூனையோ பல்லியோ அவைகளின்
செயல்களில் கூர்ந்திருக்க எனக்கு
தோன்ற வில்லை.
மேகம் கூட விலகி சுள்ளென்று.
வெயில் அடித்தது,
இல்லை எனில் அந்தச் சிறுவன்
சைக்கிளில் என் மீது மோதியிருக்க
மாட்டான்.
போய் சேர்ந்த பின்புதான்
பார்த்தேன் என்னை போலவே இன்னும்
சில பேர் வந்திருந்தனர்.
ஒரு வேளை நான் போனது கூட
அவர்களுக்கு சகுனம் பார்க்க
உதவியிருக்கலாம். யார் முகத்திலும்
நம்பிக்கை இல்லை.

Read more...

வார்த்தைக் கவிதை இரண்டு

Wednesday, June 3, 2009


வார்த்தைகள் நிரைந்த வெளி

வார்த்தைகளின் முடிச்சவிழ்க்கும் சூட்சுமம்
அறியாது அதன் வடிவங்களை பிரித்தெடுப்பதாய்
நாவால் பற்றி இழுக்கின்றேன்.
மையப்பகுதி விடுபட்டு கீழ்விழும் நான்
சிதறிக் கிடக்கும் சொற்களை அடுக்கி
மீண்டும் வார்த்தைச் செய்ய முயல்கின்றேன்.
தப்பியோடும் வார்த்தைகளை பின்
தொடர வெளியெங்கும் நிறைந்துக்
கிடக்கின்றன ஏதேதோ வார்த்தைகள்.
பறவையின் நிழலென ஊர்ந்துக் கொண்டே
இருக்கும் வார்த்தையை பிடிக்குள் இருத்த
சர்ப்பத்தின் நடனத்தோடு காத்திருக்கின்றேன்.
சுற்றிலும் வளர்ந்துக் கொண்டே இருக்கும்
வார்த்தைகளற்ற மௌனம் மெல்ல தன்
பிடிக்குள் இழுத்துச் செல்கையில்
கதவிடையில் புகும் வெளிக் காற்று
சப்தத்தை ஊற்றி நிரப்பிச் செல்கின்றது.
அலறி வெளியேறும் மௌனம் எனக்கான
வார்த்தையை ஈன்று தந்து விட்டு
மொழிகளற்ற ஆதிக்குள் பயணித்துக்
கொண்டிருக்கின்றது.

___*___வார்த்தையற்றவன்

சரளமான பேச்செனக்கு
வாய்த்திரவில்லை
உங்களின் வார்த்தைகளை
வைத்தை என் வார்த்தைகளை
தேர்ந்துக் கொள்கின்றேன்.
முனை மங்கிய பற்களுக்கிடையில்
சிக்கி வெளிவரும் என் வார்த்தைகள்
உயிரற்றது என்பதை உங்களால்
உணர்ந்து கொள்ள முடியாது.
அர்த்தமற்ற சொற்களைக் குவித்து
என்னிடம் எதை தேடுகிறீர்கள்
என்னை எப்போதும் மீட்டுச் செல்லும்
சிறு புன்னகையை தவிற வேறென்ன
இருக்கப் போகிறது என்னிடம்.
பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கும்
என் மௌனத்தையும் கலைந்து விட்டு
போய் விடுங்கள் இல்லையெனில்
உங்கள் நிழலைப் போல்
உங்கள் பின்னாலேயே வரக்கூடும்.

Read more...

நூல் வெளியீட்டு விழாவில் என் முதல் அனுபவமும், நண்பர் அன்புமணியுடனான இனிப்பான சந்திப்பும்.

Monday, June 1, 2009


நான் இதுவரை நூல் வெளியீட்டு விழாவிலோ அல்லது இலக்கியக் கூட்டத்திலோ கலந்துக் கொண்டதுக் கிடையாது அதற்கான வாய்ப்பும் அமைந்ததில்லை (அதுல எல்லாம் கலந்துக்கிரதுக்கு உங்கிட்ட என்ன தகுதி இருக்குன்னு மண்டையில ஒரு கொட்டு விழுவது புரியுது). சில தினங்களுக்கு முன் நண்பர் குடந்தை அன்புமணி அவர்கள் கவிஞர் அருனாசலசிவா அவர்களின் ‘பொன்விசிறி’ என்ற நூலின் வெளியீட்டு விழா பற்றி ஒரு பதிவாக இட்டு இருந்தார். என்னையும் அதில் கலந்துக் கொள்ள வருமாறுக் கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பேரிலே நானும் சென்றேன். சென்றதற்கு முழுக் காரணம் நம் சக பதிவு நண்பர் ஒருவரை சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணமே என்றாலும் என்னை முதன் முதலாக இது போன்ற இலக்கிய கூட்டதில் கலந்து கொள்ள வைத்த நண்பர் அன்புமணிக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

நானும் நண்பனும் வடபழனியில் இருந்துக் கிளம்பி மைலாப்பூர் ரானடே நூலகத்திற்கு வந்தபோது நுழைவாயிலில் ஒருவர் வரவேற்றுக் கொண்டிருந்தார். எங்களையும் வரவேற்றார், அவர் யாரென்பது உள்ளே சென்றதும் தான் தெரிந்தது. அவர்தான் ‘பொன்விசிறி’ நூலின் ஆசிரியர் திரு.அருனாசலசிவா அவர்கள். நிகழ்ச்சி தொடங்கி சிறிது நேரம் கழித்துதான் அன்புமணி வந்தார் வந்ததுமே கண்டுபிடித்து விட்டேன். அவருடைய நண்பர் கவிஞர் பாரதிமோகனுடன் வந்திருந்தார். பாரதிமோகன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தபடியே இருக்கைக்குக் கூட்டிச் சென்றார். பின் மாலைமுரசு உதவி ஆசிரியர் திரு.அனழேந்தி அவர்களையும் அறிமுப்படுத்தி வைத்தார்.

அறிமுகமாகி பேசத் துவங்கியதும் எந்த ஒரு தயக்கத் தொனிவுமின்றி
ஏற்கனவே நெருங்கிப் பழகினவரைப் போல இயல்பாக பேசினார் அன்புமணி. எனக்கு அதற்கு முன் சிறிய தயக்கமிருந்தது அது அவருடைய பேச்சில் கரைந்து விட்டது. எங்கள் பேச்சு வலை நண்பர்களையும் வலையைப் பற்றியும் துவங்கி பின் நிகழ்சிக்குச் சென்றது. மேடையில் பேராசிரியர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்.
அவருடைய பேச்சு நிரைய விசயங்களை அடக்கியிருந்தது. அதில் ஒன்று ரஷ்யாவில் உள்ள ஒரு நூலகத்தில் பைபில் குரான் கீதை உட்பட எல்லாப் புத்தக அலமாரிகளையும் திறந்தே வைத்திருந்தும் ஒன்றை மட்டும் மூடி பாதுகாப்பாக வைத்துள்ளார்கலாம் அது என்ன நூல் என்றால் நம்முடைய திருக்குறள் என்றும் அதற்கான காரணத்தையும் சொல்லி மிக அருமையாகப் பேசி முடித்தார். அடுத்து பேச வந்த ஓவியக் கவிஞர் திரு.அமுதபாரதி அவர்கள் வந்ததும் ஐம்பத்தி ஐந்து வணக்கங்கள் என்று ஆரம்பித்தார். அப்படி சொன்னதும் எல்லோர் புருவமும் உயர்ந்து விட்டது. அதற்கு அவரே விளக்கம் அளித்தார், இக்கூட்டதிற்கு வந்திருக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வணக்கங்கள் என்று கூறி சிதரி இருந்த கூட்டக் கவனத்தை மேடைக்கு ஈர்த்து விட்டார். தொடர்ந்த அவர் இலக்கியப் பேச்சு மிகுந்த ரசனையுடன் நாவண்மையுடன் எல்லோரையும் வசீகரித்தது. அவர் பேசும் போது மட்டும் அன்புமணியும் நானும் பேசிக் கொள்ளவில்லை. அடுத்ததாக திரு.கிரிஜா மணாளன் அவர்கள் சிரிது பேசினார். அவர் பேச தயக்கம் தெரிவித்தும் அன்புடன் வற்புறுத்தி பேச வைத்தவர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி. இவர்தான் ஒவ்வொருவரையும் பேச அழைத்தார். அடுத்ததாக கவிஞர் அ.கௌதமன் அவர்கள் பேசினார் அவர் சற்று திக்கி திக்கியே பேசினார். இடையில் நான் அழைத்து வந்த நண்பர் தூக்க மிகுதியில் வேலை இருப்பதாக சொல்லிச் சென்று விட்டார். அடுத்ததாக பேச வந்த கவிஞர் நாணற்காடன் என்னையும் அன்புமணியையும் பேச வழி செய்தார். அலுவலகம், பணி, சூழல் பற்றி மீண்டும் சிரிது பேசிக் கொண்டோம். கவிஞர் நானற்காடன் புதியவர். அதன் தயக்கம் அவர் பேச்சில் விரிவாக தெரிந்தது. அவர் சுருக்கமாக பேச யோசித்து வைத்திருக்கலாம். அவர் பேசி முடிக்கையில் கூட்டம் இல்லை மிச்சம்தான் இருந்தது. ஒரு இருபது பேர் இருந்திருப்போம் மேடையில் உள்ளவர்களையும் சேர்த்து.

நிகழ்சி முடிந்ததும் மயிலாடுதுறை இளையபாரதி (ஓவியா சிற்றிதழின் ஆசிரியர்), கிரிஜாமணாளன், நாணற்காடன், இன்னும் சிலர் என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார் அன்புமணி. பின் ஆளுக்கொரு பொன்விசிறியை வாங்கிக் கொண்டோம். நாணற்காடனும் அவருடையப் புத்தகம் ஒன்றினை கொடுத்தார், ஓவியா சிற்றிதழ், பொதிகை மின்னல், கொடி என்றொரு கையேடு அளவே உள்ள சிறிய பதிப்பு, :: இடைவெட்டு கொடி ஆசிரியரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும் அவர் சிவகாசியிலிருந்து வந்திருந்தவர். புத்தக வடிவம் என்று ஏதும் இல்லை அவருடை சிற்றிதல் ஒரு A4 அளவு தாளில் கணனி அச்சும் கையெழுத்துப் பிரதியுமாக தயாரித்துள்ளார்கள். பார்க்க மிகவும் எளிமையாக இருந்தார். மிகுந்த ஆர்வமும் தமிழ் பற்றுமே இதில் ஈடுபட வைத்திருக்கும் என எண்ணுகிறேன் :: இது போன்ற பலரின் உழைப்பும் நல்லெழுத்துக்களும் தாங்கிய போதித்தாள்கள் கையில் நிறைந்து விட்டிருந்தது.

வெளியே வந்ததும் நான், அன்புமனி, அவர் நண்பர் பாரதிமோகன :: இடை வெட்டு நண்பர் பாரதிமோகன் ஏற்கனவே கவிதை நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அடுத்தும் அவர் மௌனத்தின் சிறகு என்ற கவிதை நூலினை வெளியிட உள்ளார் :: மற்றும் மாலைமுரசு உதவி ஆசிரியர் அணழேந்தி அவர்களோடு சேர்ந்து நாண்கு பேரும் பேரூந்து நிருத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். எங்களுக்கு முன் நூலை வெளியிட்ட ‘பொதிகைத் மின்னல்’ன் ஆசிரியர் வசீகரன் அவர்கள் சபையோருக்கு தேனீர் வளங்கிய பாத்திரத்தை சும்ந்தபடி சென்றுக் கொண்டிருந்தார். வழியில் அனழேந்தி ஐயாவுக்கும் பாரதிமோகனுக்கும் இடையில் ஒரு கவிதை போட்டியே நடந்து விட்டது. அவர்களுடைய அய்க்கூக்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. மிகச் சிறந்ததாக இருந்தது அவர்களுடைய அய்க்கூ மற்றும் பேச்சு. அதிலொன்று பாரதிமோகனுடையது
எரிந்தது மூங்கில் காடு
திசையெங்கும் இசையின்
சாம்பல்.

இதற்கு சவாலாகவே அனழேந்தி அவர்களுடைய கவிதையும் அனல் பறந்தது. நாங்கள் பேரூந்து நிருத்ததிற்குச் சென்ற போது ஏதாவது சாபிடலாமே என்று அருகில் இருந்த உணவு விடுதியில் பழச்சாறு அருந்தி விட்டு வெளியே வரவும் பேரூந்து சரியாக வந்து. எனக்கு வடபழனியும் மற்ற மூவருக்கும் தீ நகருக்கும் பயணச்சீட்டுப் பெற்றுக் கொண்டு அமர்ந்தோம்.

பேரூந்தில்தான் அன்புமணியுடன் கொஞ்சம் அதிகம் பேச முடிந்தது. அவர் எதையும் வெளிப்படையாகவே பேசினார். தாம்பரத்தில் அவர் ‘பொதிகைத் தென்றல்’ என்ற சிற்றிதழை நடத்தியதையும் அது சூழ்நிலைக் காரணமாக நின்று விட்டதாகவும் பகிர்ந்துக் கொண்டார். அவரின் பேச்சின் மூலமாக சிற்றிதழை ஆரம்பித்து அதை மக்களிடம் கொண்டுச் செல்லவும் அதை தொடர்ந்து நடத்தவும் உழைப்பு, முயற்சியைத் தாண்டி ஒரு அர்ப்பணிப்பு வேண்டும் என தெறிந்துக் கொள்ள முடிந்தது. மேலும் அவர் அவருடைய பகுதியில் உள்ள கவிதையார்வாளர்களை ஒன்றினைத்து யாராவது ஒருவர் வீட்டில் அமர்ந்து கவிதை விவாதம் செய்வதாகச் சொன்னார். தீ நகர் வந்ததும் மீண்டும் இது போன்ற நிகழ்சி அல்லாது வெரொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாமென்று சொல்லி அன்புமணி விடபெற்றுக் கொண்டார். அவர்களை இறக்கி விட்டுவிட்டு என்னை மட்டும் பிரித்துச் சென்று கொண்டிருந்தது பேரூந்து. அன்புமணியுடனான இனிமையான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக அமைந்தது. தூங்கி வழியும் ஞாயிற்றுக் கிழமையை நட்பு வழிவதாய் மாற்றி இருந்தது அந்த சந்தர்ப்பம். நான் பனி சொட்டிய நிணைவுகளுடன் திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தேன் என் பணிமணைக்கு.

Read more...

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP