
நான் இதுவரை நூல் வெளியீட்டு விழாவிலோ அல்லது இலக்கியக் கூட்டத்திலோ கலந்துக் கொண்டதுக் கிடையாது அதற்கான வாய்ப்பும் அமைந்ததில்லை (அதுல எல்லாம் கலந்துக்கிரதுக்கு உங்கிட்ட என்ன தகுதி இருக்குன்னு மண்டையில ஒரு கொட்டு விழுவது புரியுது). சில தினங்களுக்கு முன் நண்பர்
குடந்தை அன்புமணி அவர்கள் கவிஞர் அருனாசலசிவா அவர்களின் ‘
பொன்விசிறி’ என்ற நூலின் வெளியீட்டு விழா பற்றி ஒரு
பதிவாக இட்டு இருந்தார். என்னையும் அதில் கலந்துக் கொள்ள வருமாறுக் கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பேரிலே நானும் சென்றேன். சென்றதற்கு முழுக் காரணம் நம் சக பதிவு நண்பர் ஒருவரை சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணமே என்றாலும் என்னை முதன் முதலாக இது போன்ற இலக்கிய கூட்டதில் கலந்து கொள்ள வைத்த நண்பர் அன்புமணிக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
நானும் நண்பனும் வடபழனியில் இருந்துக் கிளம்பி மைலாப்பூர் ரானடே நூலகத்திற்கு வந்தபோது நுழைவாயிலில் ஒருவர் வரவேற்றுக் கொண்டிருந்தார். எங்களையும் வரவேற்றார், அவர் யாரென்பது உள்ளே சென்றதும் தான் தெரிந்தது. அவர்தான் ‘பொன்விசிறி’ நூலின் ஆசிரியர் திரு.அருனாசலசிவா அவர்கள். நிகழ்ச்சி தொடங்கி சிறிது நேரம் கழித்துதான் அன்புமணி வந்தார் வந்ததுமே கண்டுபிடித்து விட்டேன். அவருடைய நண்பர் கவிஞர் பாரதிமோகனுடன் வந்திருந்தார். பாரதிமோகன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தபடியே இருக்கைக்குக் கூட்டிச் சென்றார். பின் மாலைமுரசு உதவி ஆசிரியர் திரு.அனழேந்தி அவர்களையும் அறிமுப்படுத்தி வைத்தார்.
அறிமுகமாகி பேசத் துவங்கியதும் எந்த ஒரு தயக்கத் தொனிவுமின்றி
ஏற்கனவே நெருங்கிப் பழகினவரைப் போல இயல்பாக பேசினார் அன்புமணி. எனக்கு அதற்கு முன் சிறிய தயக்கமிருந்தது அது அவருடைய பேச்சில் கரைந்து விட்டது. எங்கள் பேச்சு வலை நண்பர்களையும் வலையைப் பற்றியும் துவங்கி பின் நிகழ்சிக்குச் சென்றது. மேடையில் பேராசிரியர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்.
அவருடைய பேச்சு நிரைய விசயங்களை அடக்கியிருந்தது. அதில் ஒன்று ரஷ்யாவில் உள்ள ஒரு நூலகத்தில் பைபில் குரான் கீதை உட்பட எல்லாப் புத்தக அலமாரிகளையும் திறந்தே வைத்திருந்தும் ஒன்றை மட்டும் மூடி பாதுகாப்பாக வைத்துள்ளார்கலாம் அது என்ன நூல் என்றால் நம்முடைய திருக்குறள் என்றும் அதற்கான காரணத்தையும் சொல்லி மிக அருமையாகப் பேசி முடித்தார். அடுத்து பேச வந்த ஓவியக் கவிஞர் திரு.அமுதபாரதி அவர்கள் வந்ததும் ஐம்பத்தி ஐந்து வணக்கங்கள் என்று ஆரம்பித்தார். அப்படி சொன்னதும் எல்லோர் புருவமும் உயர்ந்து விட்டது. அதற்கு அவரே விளக்கம் அளித்தார், இக்கூட்டதிற்கு வந்திருக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வணக்கங்கள் என்று கூறி சிதரி இருந்த கூட்டக் கவனத்தை மேடைக்கு ஈர்த்து விட்டார். தொடர்ந்த அவர் இலக்கியப் பேச்சு மிகுந்த ரசனையுடன் நாவண்மையுடன் எல்லோரையும் வசீகரித்தது. அவர் பேசும் போது மட்டும் அன்புமணியும் நானும் பேசிக் கொள்ளவில்லை. அடுத்ததாக திரு.கிரிஜா மணாளன் அவர்கள் சிரிது பேசினார். அவர் பேச தயக்கம் தெரிவித்தும் அன்புடன் வற்புறுத்தி பேச வைத்தவர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி. இவர்தான் ஒவ்வொருவரையும் பேச அழைத்தார். அடுத்ததாக கவிஞர் அ.கௌதமன் அவர்கள் பேசினார் அவர் சற்று திக்கி திக்கியே பேசினார். இடையில் நான் அழைத்து வந்த நண்பர் தூக்க மிகுதியில் வேலை இருப்பதாக சொல்லிச் சென்று விட்டார். அடுத்ததாக பேச வந்த கவிஞர் நாணற்காடன் என்னையும் அன்புமணியையும் பேச வழி செய்தார். அலுவலகம், பணி, சூழல் பற்றி மீண்டும் சிரிது பேசிக் கொண்டோம். கவிஞர் நானற்காடன் புதியவர். அதன் தயக்கம் அவர் பேச்சில் விரிவாக தெரிந்தது. அவர் சுருக்கமாக பேச யோசித்து வைத்திருக்கலாம். அவர் பேசி முடிக்கையில் கூட்டம் இல்லை மிச்சம்தான் இருந்தது. ஒரு இருபது பேர் இருந்திருப்போம் மேடையில் உள்ளவர்களையும் சேர்த்து.
நிகழ்சி முடிந்ததும் மயிலாடுதுறை இளையபாரதி (ஓவியா சிற்றிதழின் ஆசிரியர்), கிரிஜாமணாளன், நாணற்காடன், இன்னும் சிலர் என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார் அன்புமணி. பின் ஆளுக்கொரு
பொன்விசிறியை வாங்கிக் கொண்டோம். நாணற்காடனும் அவருடையப் புத்தகம் ஒன்றினை கொடுத்தார், ஓவியா சிற்றிதழ், பொதிகை மின்னல், கொடி என்றொரு கையேடு அளவே உள்ள சிறிய பதிப்பு,
:: இடைவெட்டு கொடி ஆசிரியரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும் அவர் சிவகாசியிலிருந்து வந்திருந்தவர். புத்தக வடிவம் என்று ஏதும் இல்லை அவருடை சிற்றிதல் ஒரு A4 அளவு தாளில் கணனி அச்சும் கையெழுத்துப் பிரதியுமாக தயாரித்துள்ளார்கள். பார்க்க மிகவும் எளிமையாக இருந்தார். மிகுந்த ஆர்வமும் தமிழ் பற்றுமே இதில் ஈடுபட வைத்திருக்கும் என எண்ணுகிறேன் :: இது போன்ற பலரின் உழைப்பும் நல்லெழுத்துக்களும் தாங்கிய போதித்தாள்கள் கையில் நிறைந்து விட்டிருந்தது.
வெளியே வந்ததும் நான், அன்புமனி, அவர் நண்பர் பாரதிமோகன
:: இடை வெட்டு நண்பர் பாரதிமோகன் ஏற்கனவே கவிதை நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அடுத்தும் அவர் மௌனத்தின் சிறகு என்ற கவிதை நூலினை வெளியிட உள்ளார் :: மற்றும் மாலைமுரசு உதவி ஆசிரியர் அணழேந்தி அவர்களோடு சேர்ந்து நாண்கு பேரும் பேரூந்து நிருத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். எங்களுக்கு முன் நூலை வெளியிட்ட ‘
பொதிகைத் மின்னல்’ன் ஆசிரியர் வசீகரன் அவர்கள் சபையோருக்கு தேனீர் வளங்கிய பாத்திரத்தை சும்ந்தபடி சென்றுக் கொண்டிருந்தார். வழியில் அனழேந்தி ஐயாவுக்கும் பாரதிமோகனுக்கும் இடையில் ஒரு கவிதை போட்டியே நடந்து விட்டது. அவர்களுடைய அய்க்கூக்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. மிகச் சிறந்ததாக இருந்தது அவர்களுடைய அய்க்கூ மற்றும் பேச்சு. அதிலொன்று பாரதிமோகனுடையது
எரிந்தது மூங்கில் காடு
திசையெங்கும் இசையின்
சாம்பல்.இதற்கு சவாலாகவே அனழேந்தி அவர்களுடைய கவிதையும் அனல் பறந்தது. நாங்கள் பேரூந்து நிருத்ததிற்குச் சென்ற போது ஏதாவது சாபிடலாமே என்று அருகில் இருந்த உணவு விடுதியில் பழச்சாறு அருந்தி விட்டு வெளியே வரவும் பேரூந்து சரியாக வந்து. எனக்கு வடபழனியும் மற்ற மூவருக்கும் தீ நகருக்கும் பயணச்சீட்டுப் பெற்றுக் கொண்டு அமர்ந்தோம்.
பேரூந்தில்தான் அன்புமணியுடன் கொஞ்சம் அதிகம் பேச முடிந்தது. அவர் எதையும் வெளிப்படையாகவே பேசினார். தாம்பரத்தில் அவர் ‘பொதிகைத் தென்றல்’ என்ற சிற்றிதழை நடத்தியதையும் அது சூழ்நிலைக் காரணமாக நின்று விட்டதாகவும் பகிர்ந்துக் கொண்டார். அவரின் பேச்சின் மூலமாக சிற்றிதழை ஆரம்பித்து அதை மக்களிடம் கொண்டுச் செல்லவும் அதை தொடர்ந்து நடத்தவும் உழைப்பு, முயற்சியைத் தாண்டி ஒரு அர்ப்பணிப்பு வேண்டும் என தெறிந்துக் கொள்ள முடிந்தது. மேலும் அவர் அவருடைய பகுதியில் உள்ள கவிதையார்வாளர்களை ஒன்றினைத்து யாராவது ஒருவர் வீட்டில் அமர்ந்து கவிதை விவாதம் செய்வதாகச் சொன்னார். தீ நகர் வந்ததும் மீண்டும் இது போன்ற நிகழ்சி அல்லாது வெரொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாமென்று சொல்லி அன்புமணி விடபெற்றுக் கொண்டார். அவர்களை இறக்கி விட்டுவிட்டு என்னை மட்டும் பிரித்துச் சென்று கொண்டிருந்தது பேரூந்து. அன்புமணியுடனான இனிமையான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக அமைந்தது. தூங்கி வழியும் ஞாயிற்றுக் கிழமையை நட்பு வழிவதாய் மாற்றி இருந்தது அந்த சந்தர்ப்பம். நான் பனி சொட்டிய நிணைவுகளுடன் திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தேன் என் பணிமணைக்கு.
Read more...